அபிராமி அந்தாதி #9


நண்பர்களே,

இன்றைய பாடல்களிலும் எப்போதும் போல் பக்தி தான் நிறைந்துள்ளது. ஒரு பெண்ணை ஆதிபராசக்தியாக, அன்னையாக, உலகின் முதல் கடவுளாக உருவகப்படுத்தி பட்டர் பாடியிருப்பது ஒரு பெண்ணாக மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் அவரின் ஒருமித்த பக்தி, நமக்கு மன ஒருமையைக்  கற்றுத் தருகிறது.

Image

பாடல் – 21

(அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய)

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

பொருள்

நித்ய சுமங்கலியே, செங்கலசம்  போன்ற தனங்களைக் கொண்ட மலைமகளே, வெண் சங்கு வளைக்கரங்கள் கொண்டவளே, சகல கலைகளைக்  கற்ற மயிலே, அலை பொங்கும் கங்கையைத் தன் முடியில் தரித்த சிவபிரானின் ஒரு பாதியே, பக்தர்கள் சூழ்ந்தவளே, பொன்நிறத்தினாளான பிங்கலை; நீல நிறத்தினாளான காளி; செந்நிறத்தினாளான லலிதாம்பிகை; வெண்ணிறத்தினளான வித்யா தேவி; பச்சை நிறத்தினாளான உமையன்னை யாவும் நீயே எந்தன் தாயே.

பாடல் – 22

(இனிப் பிறவா நெறி அடைய)

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

பொருள்: 

மென்மையான கொடியே, இளம் வஞ்சிப்பூக்களின் கொம்பே, தகுதியற்ற எனக்கு உன் கருணையால் உவந்தளித்த கனியே, மனம் பரப்பும் வேதப் பொருளே, பனி உருகும் இமயத்தில் விளையாடும் பெண் யானையை நிகர்த்தவளே, பிரம்மன் முதலான முக்கோடி தேவர்களைப் பெற்ற அன்னையே, உன் அடியேன் இவ்வுலகை நீத்து மீண்டும் இங்கு பிறவாமல் இருக்க என்னை ஆட்கொள்ள வேண்டுகிறேன்.

பாடல் – 23

(எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க)

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

பொருள்

உன் கருணையினால் என் மனதின் துன்பங்களை மறக்கச் செய்யும் கள்ளே, ஆனந்தத்தின் ஆனந்தமே, என் கண்ணின் மணி போன்றவளே! நின் திருக்கோலம் அல்லாது வேறு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின் அடியார் கூட்டத்தை பகைத்துக் கொள்ள மாட்டேன். வேறு சமயங்களை விரும்பேன். மூன்று உலகங்களாகிய விண், மண், பாதாள உலகங்களின் உள்ளேயும், வெளியேயும் வியாபித்திருப்பவளே!!

 

பாடல் – 24

(நோய்கள் விலக)

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

பொருள்:

ஒளி பொருந்திய மணியே, மணியின் பிரகாசமே, அந்த மணிகளால் புனையப்பெற்ற ஆபரணமே, அந்த ஆபரணத்தின் அழகே, நின் பெருமை அறியார்க்கு ஏற்படும் பிணியே, அந்தப் பிணியைப் போக்கும் அருமருந்தும் நீயே,  இறவாமை தருகின்ற அமுதமே, உன்னுடைய தாமரை போன்ற மென் பாதங்கள் பணிந்த யான் வேறு யாரையும் பணியேன்.

பாடல் – 25

(நினைத்த காரியம் நிறைவேற)

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

பொருள்

மும்மூர்த்திகளின் தாயே, உலகின் பிணிகளை போக்க வந்த அபிராமி என்னும் அருமருந்தாக விளங்கும் அன்னையே! நின் அடியார்களின் பின்னே திரிந்து அவர்களுக்கு பணிவிடை செய்தும், முன்னே பல தவங்கள் செய்தும் என் பிறப்பறுக்க முயன்று வருகிறேன். இனியும் உன்னை மறவாமல் நின்று உன்னை வணங்கிக் கொண்டே இருப்பேன். இனி எனக்கேது குறை?

அன்புடன்,
ரேணுகா 

Reference:

1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. http://www.comsys.com.sg/media/pdf/Abirami_Anthathi_Kannadasan.pdf

3. Image courtesy: http://vedantavaibhavam.blogspot.in/2011/10/blog-post.html

Advertisements

2 thoughts on “அபிராமி அந்தாதி #9

  1. தமிழே ஆனாலும் பொருள் புரிந்து அந்த வரிகளை உச்சரிக்கும் பொழுது நாம் சொல்வது இன்னும் பலம் பெறுகிறது. உங்கள் முயற்சி எனக்கு பேருதவியாக உள்ளது. நாலு நாலு பாடல்களாகப் படிப்பது இன்னும் நன்றாக உள்ளது 🙂 தலைப்பும் உதவியாக உள்ளது.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s