அபிராமி அந்தாதி #10

Image

இந்த ஐந்து பாடல்களுமே அன்னையின் திருவருளையும், அன்பையும் மெச்சிப் பாடப்பட்டுள்ளன. பட்டர் அம்மன் தன பாடல்களை ஏற்றுக் கொண்டதை மிகுந்த உவகையுடன் எடுத்துரைக்கிறார். பின் அபிராமியின் அருளால் கிடைக்கும் வரங்களைப் பற்றிக்  கூறி நம்மையும் அன்னையின் அடியவர்களாக்கி விடுகிறார். கடைசிப் பாடலில் (30) இன்னும் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு ஒருமுறை நம்மை ஏற்றுக் கொண்டால் பிறகு நாம் பாவம் செய்தாலும் நம்மை விடுவிப்பாள் அன்னை என்று கூறி அபிராமியின் எல்லையற்ற தாயன்பைச் சுட்டிக் காட்டுகிறார்.


பாடல் – 26
(சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக)

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

பொருள்:
மணம் கமழ்கின்ற கடம்ப மலர்களைக் குழலில் சூடும் தெய்வத் திருமகளே!! ஈரேழு பதினான்கு உலகங்களில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிந்து வரும் மும்மூர்த்திகளும் உன்னைத் துதிக்கும் அடியவர்களாவர். தெய்வீக மணம்  வீசும் நின் இணையடிகளில் இந்த எளியவனின் நாவினின்று பாடப்பட்ட சொற்களைக் கூட துதிகளாய் ஏற்றுக் கொண்டு மகிழ்வது உண்மையில் நகைப்புக்குறியதன்றோ!!

பாடல் – 27:

(மனநோய் அகல)

 

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி!  நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

பொருள்:
அன்னை அபிராமியே, என் நெஞ்சகத்து இருள்களான, ஆணவம், கன்மம், மாயை என்ற என்ற வஞ்சக எண்ணங்களை உடைத்தெறிந்தாய்! என் உள்ளம் உருகும் அன்பினை அதில் வைத்தாய்! இந்த யுகம் முழுதும் நின் தாமரைப் பாதங்களுக்கு சேவை புரிய அருள் தந்தாய்! உந்தன் அருள் புனலில் எந்தன் மன அழுக்குகள் நீங்கின!! அழகானவளே, நினதருளை என்னவென்று சொல்லுவேன்!!
பாடல் – 28.

(இம்மை மறுமை இன்பங்கள் அடைய)

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே

பொருள்: 
சொல்லும் பொருளும் போல, நடம் புரியும் சிவபிரானுடன் இணைந்திருக்கும் பரிமள சுகந்தம் வீசும் பூங்கொடியே, அன்றலர்ந்த மலர் போன்ற நின் தாள்களை அல்லும் பகலும் தொழுது நிற்பவர்களுக்கு அழியாத அரசும், உயர் பதவியும், என்றும் நிலை பெற்று விளங்கும் தவ நெறிகளும், இறுதியில் சிவலோகப் பதவியும் சித்திக்கும்.

பாடல் – 29

(எல்லா சித்திகளும் அடைய)

சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் ,வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

பொருள்: 
அபிராமியே!! எண்வகையான சித்திகளும் நீயே! சித்திகளை அருளும் தெய்வமான பராசக்தியும் நீயே!! அந்த சக்தி தழைக்கும் சிவமும் நீயே! தவம் செய்து கிடைக்கும் முக்தியும் நீயே! அந்த முக்திக்கு அடிப்படையான மூலமும் நீயே! அந்த மூலத்திநின்று வந்த ஞானமும் நீயே! அந்த ஞானத்தினின்று, சகல பந்தங்களில் இருந்தும் என்னைக் காத்தருளும் திரிபுர சுந்தரி நீயே!!

பாடல் – 30

(அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க)

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

பொருள் : 
ஓருரு கொண்டும், பல உருவங்களாகவும், உருவமற்ற அரூபமாகவும் இருக்கும் உமையவளே! தாயே! நான் பாவங்கள் செய்யுமுன்பே என்னைத் தடுத்தாட்கொண்ட தாயே! இனி நான் என்ன செய்தாலும் உன்னால் என்னைக் கை விட முடியாது! நான் பாவங்கள் பல புரிந்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னைக் காத்து கரை சேர்ப்பது உன் திருவருள்தான்.

அன்புடன்,
ரேணுகா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s