அபிராமி அந்தாதி #12

 பாடல்கள் 34-40

Image

பாடல் 34:

(சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க)

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

பொருள்:

அன்னை  அபிராமியானவள் நான்முகங்களிலும், பசுந்தேன் கலந்த துளப மாலையும், நவமணிகளும் அணிந்திருக்கும் திருமாலின் மார்பிலும், ஈசனின் இட பாகத்திலும் வியாபித்திருக்கிறாள். அவள் பொன்னிறமான செந்தேன் சொரியும் தாமரை மலரிலும் விரிந்த கதிர்களைக் கொண்ட கதிரவனிலும், குளிர் நிலவிலும்  திகழ்பவள். தன்னை சரணடையும் பக்தர்களுக்கு மிகுந்த பரிவுடன் வானுலக வாழ்க்கையை அருள்வாள்.

பாடல் 35:

(திருமணம் நிறைவேற)

திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே

பொருள்:

அலைகள் பொங்கும் வெண்பாற்கடலில் ஆதிசேஷனின் பாம்பணை மேல் அறிதுயிலில் அமர்ந்தவளே, ஈசனின் முடிமேல் இருக்கும் பிறை நிலவின் சுகந்த மனம் கொண்ட நின் பாதங்களை எங்கள் சிரங்களின் மீது வைத்து அருள நாங்கள் செய்த தவப்பயனை வியந்து போற்றுகிறோம். இத்தகைய பாக்கியம் கணக்கில்லாத எண்ணிக்கை கொண்ட வானுலக தேவர்க்கும் சித்திக்குமோ என்று எண்ணி  வியக்கிறோம்.

பாடல் 36:

(பழைய வினைகள் வலிமை பெற)

பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

பொருள்:

தாமரை போன்ற தனங்களை உடைய அபிராமியே, செல்வமாகவும், செல்வங்களை துய்த்து உணரப்படும் போகமாகவும், போகத்தினால் வரக்கூடிய மாயையாகவும், மாயையின் முடிவில் தோன்றும் தெளிந்த மதியாகவும் நீயே விளங்குகிறாய். என் மனதின் வஞ்சக இருள் சிறிதளவு கூட இல்லாமல் ஞானமேனும் ஒளியால் நிரப்பிய உந்தன் திருவருளை எண்ணி வியக்கிறேன்.

பாடல் 37:

(நவமணிகளைப் பெற)

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

பொருள்:

தாய் அபிராமியானவள் தன் கரங்களில் அணிந்திருப்பது கரும்பு வில்லும், மலர் அம்புகளுமாகும். தன் தாமரை போன்ற மேனியில் அணிந்திருப்பது வெண்முத்து மாலையாகும்.  கொடிய நஞ்சை உமிழும் அரவத்தின் படம் போன்ற இடையில் பல மணிகளால் கோர்க்கப்பட்ட மேகலையும் பட்டும் அணிந்திருக்கும் அன்னையானவள், எட்டுத்திக்கும் ஆடையாகக் கொண்டு அனைத்து செல்வங்களுக்கும் தலைவனாக விளங்கும் ஈசனின் இடபாகத்தில் இணைந்து பொலிகிறாள்.

பாடல் 38:

(வேண்டியதை வேண்டியவாறு அடைய)

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

பொருள்:

பவளக் கொடி போன்ற உடலில் உடுக்கை போன்ற இடையையும், அதற்கு இணையான தனங்களையும் கொண்ட அபிராமி அன்னை தன் சிவந்த இதழ்களும் வெண் முத்துக்கள் போன்ற அழகிய பற்களும்  திகழ குளிர் புன்னகை புரிந்து நம் இறைவனான சங்கரனை எதிர்கொண்டு அவரின் தவத்தைக் கலைத்தவள். அத்தகைய தகைமை வாய்ந்த அன்னை அபிராமியை பணிந்து தொழுதால் தேவலோகமான அமராவதியை ஆளலாம்.

பாடல் 39:

(கருவிகளைக் கையாளும் வலிமை பெற)

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

பொருள்:

முப்புரங்களை அழிக்க அம்பு தொடுத்த சிவ பிரானின் ஒரு பாகமான, ஒளி வீசும் வாள் போன்ற நெற்றியுடைய அன்னையே அபிராமி! என்னை ஆள்வதற்கு நின் திருவடித்  தாமரைகள் உண்டு, எமனிடம் இருந்தென்னைக் காக்க உந்தன் கடைக் கண் பார்வை உண்டு. இத்தனை அருள் கொண்ட உன்னை நான் முயன்று வழிபடாமல் இருந்தால் அது என் குறையே அன்றி உன் குறை அல்ல.

பாடல் 40:

(பூர்வ புண்ணியம் பலன்தர)

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

பொருள்:

ஒளி பொருந்திய வாள் போன்ற தன் நெற்றியில் கண்களை உடைய அபிராமியை, வானுலகத் தேவர்கள் யாவரும் வந்து இறைஞ்சி  நிற்பார்கள். அறியாமை நிறைந்தவர்களுக்கு அருகில் இருந்தும் தென்படாத அபிராமி, என்றும் நித்ய கன்னியாகத் திகழ்கிறாள். இத்தகைய அன்னையைத் தொழுது அவள் பேரன்பைப் பெற நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமே காரணமாகும்.

அன்புடன்,

ரேணுகா

Reference:

1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. http://www.comsys.com.sg/media/pdf/Abirami_Anthathi_Kannadasan.pdf

3. Image courtesy: http://www.thirukadaiyursriabirami.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s