விஷ்ணுபுரம் -கருத்துகளும் விமர்சனங்களும்!

BQl07LcCEAIh_Yz.jpg large

பெயர் – விஷ்ணுபுரம்
வகை – புதினம்
ஆசிரியர் – ஜெயமோகன்
வெளியிட்டஆண்டு – 1997

மேலதிகத் தகவல்களுக்கு – விஷ்ணுபுரம் – Wikipedia

விஷ்ணுபுரம், வார்த்தைகளின் சமுத்திரம். கதைகளும், தத்துவ தருக்கங்களும் விரவிக் காணப்படும் இந்த நூலில் வித்தியாசமான கதை சொல்லும் உத்திகளை ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். நூலை மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார், ஸ்ரீ பாதம், கௌஸ்துபம் மற்றும் மணிமுடி. மூன்றிலும் ஒரே சம்பவங்கள் திரும்பத் திரும்ப வருகின்றதால், கதையின் முடிவு பெரிய ரகசியமாக இல்லை. கதையின் முதல் பாகத்திலேயே விஷ்ணுபுரம், கோவில், தோரண வாயில், கண்டாமணியின் ஏழு ஓசைகள், சோனா நதியின் சிவப்பு நிறம் ஆகியவற்றின் ரகசியங்கள் விளக்கப் பட்டு விடுகின்றன. மிகச்சாதாரணக் கதை, சம்பவங்களும் ஆசியரின் வர்ணனைகளும் முன்னூறு பக்கங்களை எண்ணூறு பக்கங்களுக்கு மேல் வளர்த்துகின்றன. பல்வேறு குரு பரம்பரைகளைப் பற்றியும், பல்வேறு மொழிகள், மதங்கள், மொழிகள் இந்நூலில் வருகின்றன. மூன்று பாகங்களிலும் கதைகள் முன் பின்னாக சிதறலாக வெளிப்படுவதன் மூலம் காலகட்டம் பற்றி கணிக்க முடியாதவாறு குழப்பம் ஏற்ப்படுகின்றது. பௌத்தம் உள்ளிட்ட பல மதங்கள், மொழிகள், சிற்ப சாஸ்திரங்கள், மிருக வைத்தியம், தாந்திரிகம் மற்றும் பழங்கால சம்பிரதாயங்கள் பற்றி அறிய ஆசிரியர் களப்பணி செய்திருக்கக் கூடும் என்று யூகிக்கிறேன். நல்ல முயற்சி.

கதை எழுதப் பட்ட உத்தி மட்டுமே விஷ்ணுபுரத்தின் வெற்றி. முதல் பாகத்தில் இயல்பாக செருகப்பட்ட பல்வேறு கதைகள் பாதியில் நிறுத்தப்படுகின்றன. பின்னர் மூன்றாம் பாகத்தில் அவற்றின் முடிவுகள் பல்வேறு புதிய கதாபாத்திரங்கள் மூலமாக வலிந்து சொல்லப்படுகின்றன. எல்லாக் கதைகளும் பாதி உண்மையாகவும், பாதி புனையப் பட்ட கதைகளாகவும் கிடக்கின்றன. உதாரணமாக, சித்திரை என்ற சிறுமி பாத்திரம். அவள் லாய அதிகாரியின் பேத்தி, அவர்களின் குல தெய்வம் செங்கழல் கொற்றவை என்ற பத்தினிப் பெண். அவளைப் பாண்டிய மன்னன் திருமணம் செய்ய ஆடை ஆபரணங்களை அவள் இல்லத்துக்கு அனுப்புகிறான். அனைத்தையும் அணிந்து கொண்டு திருமணத்துக்குத் தயாராகிறாள். அவளின் தாத்தா விபூதி எடுத்துவரும் முன்னர் அவள் அறை தீப்பிடித்து எரிகிறது. இத்துடன் முதல் பாகத்தில் இந்த அத்தியாயம் முடிந்து, மூன்றாம் பாகத்தில் ஒரு பாட்டி வாயிலாக இக்கதை சித்திரை தான் திடீரென பெரிய சுடராகத் தோன்றி செங்கழல் கொற்றவையாக மாறியதாக முடிகிறது, அதன் காரண காரியங்கள் எதுவும் விளக்கப்படவில்லை. இதைப் போன்ற பல முரண்பாடுகள் நூல் முழுதும் விரவிக் கிடக்கின்றன.

இதைப் போன்று பல கதைகள், அவற்றின் நாயகர்கள் முறையே, பிங்கலன், பீதாம்பரம், திருவடி, சங்கர்ஷணன், திரிவிக்கிரமர், கோபிலர், சூரியதத்தர், அஜிதர், காசியபர், வீர நாராயணர், பெருந்தச்சர், பவதத்தர், மகா காலன், பெரு மூப்பன், வீர வல்லாளன், அநிருத்தன், லட்சுமி, நீலி, பத்மாட்சி, லலிதாங்கி, சாருகேசி, பரவை, வைஜயந்தி ஆகியோர். எல்லாக் கதைகளிலும் ஆரம்பம் நன்றாகவே இருக்கிறது. முப்பது சதவீதம் உண்மையாகவும், முப்பது சதவீதம் நம் கற்பனையிலும், மீதி நாற்பது சதவீதம் மிகைப் படுத்தப்பட்டும் முடிகின்றன.

விஷ்ணுபுரம் நூல் அட்டையில் பாம்பணையில் துயிலும் சிறிது சிதைந்த மகாவிஷ்ணுவின் சிலை உள்ளது. ஆனால் கதைப்படி விஷ்ணுபுரத்தில் உள்ள சிலையானது மல்லாந்து படுத்திருக்கும் ஒரு மனிதனின் சிலை. இதில் வரும் கதைகளின் படி அச்சிலையானது விஷ்ணுவே அல்ல, அது பெருமூப்பன் என்பவனின் சிலை அல்லது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் செதுக்கிய சிலை. அரசியல் மற்றும் அதிகார ஆசையுடன் விஷ்ணுபுரத்தை ஆள்வதற்காக பலரின் தந்திரத்தால் உருவாக்கப் பட்ட நகரமே விஷ்ணுபுரம். அவர்கள் அந்த சிலையை விஷ்ணுவாக மாற்றிப் பிரம்மாண்டமான கோபுரங்களையும், சாஸ்திரங்களையும் ஏற்படுத்தினர். வழிவழியாக பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்நகரை தத்தர்கள் என்ற பெயர்கொண்ட குருபரம்பரை வழி நடத்துகின்றனர்.

விஷ்ணுபுரத்தில் நடைபெறும் மகாபாதத் திருவிழாவிற்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். லட்சம் பேருக்கு மேல் வருவதாகவும், மக்கள் கூட்ட நெரிசல் பற்றியும் பல பக்க வர்ணனைகள் தெறிக்கின்றன. அப்பேர்ப்பட்ட நகரில் பெரிய தொழிலாளர்கள் என்று பார்த்தால், கணிகையர்கள் தான் முதலிடம் வகிக்கிறார்கள். பின்னர் முறையே பண்டிதர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள், வணிகர்கள், பிச்சைக்காரர்கள். நிறைய பிராமணர்கள் இருக்கிறார்கள், சூத்திரர்களை திட்டுவதும், பந்தியில் இடம் பிடித்து உண்பதும் அவர்கள் தொழிலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடெங்கிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் ஒரு காட்சியில் கூட இறைவனை மனமுருகிப் பிரார்த்திப்பதாக எந்தக் குறிப்புகளும் இல்லை. அங்கே கிடைக்கும் அப்பங்களை உண்பதும், சபையில் ஏதாவது பரிசு கிடைக்குமா என்று ஏங்குவதும், வயிறு புடைக்கக் கள்ளைப் பருகுவதும், தாசித் தெருவில் கணிகையரை தரிசிப்பதுமாகவும் இருக்கின்றனர். அனைத்து வர்ணனைகளிலும் மிகை தென்படுகிறது.

ஞானத் தருக்கங்கள் கதையின் பாதிக்கு மேலான பக்கங்களைப் பிடித்துக் கொள்கின்றன. ஒரே மாதிரியான கருத்தை ஒருவர் மறுப்பதும், ஒருவர் ஏற்பதுமாகச் செல்கிறது. அவற்றைப் பற்றி எழுதுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்தக் கதையைப் பற்றியும் காவியமாக சித்தரித்துக் கதைக்குள்ளேயே சில பேர் பேசிக் கொள்கிறார்கள். மூன்று காண்டங்களைப் பற்றியும் அலசுகிறார்கள். இது எனக்கு கதையில் நகைச்சுவை இல்லாத குறையை தீர்த்தது. இது தான் நுட்ப நகைச்சுவையோ என்னவோ?! நுட்ப நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வருகிறது, கதை மாந்தர்களில் பலர் மிக மட்டமான 18+ வகையான இழிந்த நகைச்சுவை பேசுகிறார்கள். அதற்கும் கதை மாந்தர்கள் சிலர் சிரித்து வைக்கிறார்கள். புரிந்தும் தொலைக்கிறது. நம்மைப் போய் மொண்ணை என்றாரே என்ற ஆற்றாமையும் வருகிறது. இத்தகைய நகைச்சுவைகள் இலக்கிய மொண்ணையின் மொக்கைத்தனங்கள்.

கதையில் அழகுணர்ச்சி என்பது சிறிதும் இல்லை, ஆலயங்கள் கூட அழகை விட பிரம்மாண்டத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. கோபுர வாசலும், தோரணங்களும், லட்சம் யானைகளும், சோனா நதியும் எல்லாமே பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று கூவும் மொழிகள் அலுப்பூட்டுகின்றன. வாசனைகளை விட நாற்றங்களே அதிகம். மலம் மலை போலக் குவிந்திருக்கும் காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன (காடன் விளை சிறுகதையிலும் இதே மல மலையைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்). மனிதனின் நவதுவாரத்திலும் இருந்து வெளியேறும் கழிவுகளை மிக அழகாக(!?) ரசித்து ரசித்து சித்தரிக்கிறார், நமக்குத் தான் படிக்க முடிவதில்லை. இந்தக் கதையில் ஒரே ஒரு வெண்குதிரை மட்டும் அழகாக இருந்தது, அதுவும் வெறி பிடித்துக் காணாமல் போய்விடுகிறது. மூன்றாம் பாகத்தில் அந்த புரவிக்கும் கோவில் எழுப்பப்பட்டுள்ளதை மறக்காமல் குறிப்பிட்டு விட்டார் ஆசிரியர். ஏன், எதற்கு என்று தான் தெரியவில்லை. ஒருவேளை அந்த குதிரையால் இறந்து போன ஆழ்வாரின் நினைவாக குதிரைக்குக் கோவில் எழுப்பியிருப்பார்களோ என்னமோ.

மற்றபடி எல்லா கதாநாயகர்களும் ஒவ்வொரு கணிகையர்களால் ஞானம் பெறுகிறார்கள். கற்பு நெறி தவறியவர்கள் எல்லாரும் ஞானம் பெறுகின்றனர். ஓரினச் சேர்கையாளர்கள் பெரிய ஞானிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். வித்யார்த்திகள் யாருக்குமே ஞானமோ, தியானமோ கை கூடுவதில்லை. அனைவரும் தாம் பிரம்மச்சாரிகளாக இருப்பதை எண்ணி வருந்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் குருவானவர்கள் தத்தம் இளமையை எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் தொலைத்து விட்டதை எண்ணி கவலைப்பட்டே முக்தி (!?) அடைகின்றனர். நிறையப் பேர் சாகிறார்கள். கதை நெடுகிலும் யார் இறந்தாலும் ஒரு கருப்பு நாய் வந்துவிடுகின்றது, மர்ம தேசம் நாடகத்தில் வருவது போல. யாருக்குமே வெற்றி மனப்பாங்கோ, தர்ம சிந்தனையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதே இல்லை. யாரேனும் ஒருவர் பெரிதாக வெற்றி பெற்றுவிட்டால், உடனே தாம் வெற்றி கொள்ள இனி எதுவுமே இல்லையே என்று வருந்த ஆரம்பிக்கிறார்கள், அல்லது தாம் பெற்ற வெற்றியை தோல்வியாக, குற்ற உணர்வாக எடுத்துக் கொண்டு குமைகிறார்கள். உதாரணம் ஞான சபையில் காவியத்தை அரங்கேற்றிய சங்கர்ஷணன், கிருஷ்ண பட்ச பரிட்சையில் வென்ற அஜிதர். (ஊமைச் செந்நாய் (ஆசிரியர்ஜெயமோகன்) என்ற கதையில் வரும் வெள்ளைக்காரன் யானையைக் கொன்றதும் இதே உணர்வுகளைத் தான் அடைகிறான்).

நான் மேலே சொன்ன அனைவருக்கும் குரு பரம்பரை கதையின் கடைசிக் கட்டம் வரை வருகிறது, கிட்டத்தட்ட அறுபது தலைமுறைகளாக. ஆசிரியர், முக்கிய கதாபாத்திரமான சங்கர்ஷணன் வாயிலாக இக்கதையை காவியமாக சித்தரித்து இதன் நம்பகத்தன்மையையும், பொய்யையும்  அலசுகிறார். இதனால் யாருக்கும் என்ன பயனும் இல்லை என்று ‘உணர்ந்து’ கூறுகிறார்.  இவை அனைத்துமே வெறும் பொய் தான் என்றெல்லாம் பத்மாட்சியிடம் சொல்வது விஷ்ணுபுரம் புத்தகத்தைப் பற்றித் தான் என்று நினைக்கிறேன். சங்கர்ஷணன் மகன் அனிருத்தன் திடீரென இறந்து போகிறான். புத்திர சோகம் என்று கூறிக் கொண்டு சங்கர்ஷணன் கணிகை பத்மாட்சியிடம் ஆறுதல் தேடுகையில், தாய் லட்சுமி தன் கற்பனையில் வரித்த ஆணைப் பற்றி நினைத்து அமைதி அடைகிறாள், துறவி போல் பாட்டுப் பாடி இறைவனைத் துதிக்கிறாள், இறுதியில் பிங்கலனைத் தன் மகனாக எண்ணி உறவு கொள்கிறாள். பிங்கலனின் முன் ஜென்ம தாய் தான் லட்சுமி என்று தெரிய வந்து பிங்கலன் ஞானம் பெறுகிறான். ஆசிரியர் தன்னை பெரிய ஞானி என்று எண்ணிக் கொள்வதும் அல்லாமல், தன்னைப் பற்றிய கருத்துக்களை மணிமுடி பாகத்தில் சிறப்பாக சொல்லிக் கொள்கிறார். அங்கதம் பேசுவதும், எள்ளல் செய்வதும் மட்டுமே ஞானம் என்ற தொனியில் பாவகன் என்பவன் பேசுகிறான்.அவனும் தியானத்தில் அமர்ந்திருக்கையில் பூனை கடித்து இறக்கிறான்.

அழகுணர்ச்சியைப் பற்றி சொன்னேன் அல்லவா, கதையில் தொழுநோய்க்காரன் ஒருவன் வருகிறான். அவனைப் பற்றியும், அவன் நோயைப் பற்றிய வர்ணனைகளே போதும். யானைகள் துணைக் கொண்டு உளுந்து மாவரைத்து சக்கரையும் நெய்யும் போட்டு அப்பங்கள் சுடுகின்றனர் கூடை கூடையாக, அதைக் கூட வர்ணிக்கும் விதத்தில் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறார். பிராமணர்கள் சாப்பிடும் காட்சி ஒன்று வருகிறது, தேவையே இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பரிமாறுபவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். அவர்கள் பல விதமான பதார்த்தங்களை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று கூறி ஒரு அருவருப்பை ஏற்ப்படுத்தி விடுகிறார். இதாவது பரவாயில்லை, பாண்டிய மன்னனை வர்ணிக்கும் விதம் இருக்கிறதே, கருப்பு நிறம் என்று நான்கைந்து இடங்களில் சிறிது எள்ளும் தொனியில் சொல்கிறார். கருப்பு நிறமானால் என்ன சாமி? சரி பரவாயில்லை. அவனுக்கு சொரி, சிரங்கு மற்றும் கெட்ட வியாதிகள் இருப்பதாக பட்டியலிடுகிறார் பாருங்கள், அடடா. பாண்டியன் எப்போதும் கணிகையர் கூட்டத்துக்கு நடுவிலேதான் இருக்கிறார். கதைக்கும் பாண்டிய மன்னனின் வர்ணனைகளுக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை. பல நகரங்களையும், பிரம்ம்ம்ம்மாண்டமான சிறப்பு மிக்க விஷ்ணு புரத்தையும் ராஜ்ய பரிபாலணம் செய்யும் மன்னனை கொஞ்சமேனும் நன்றாக கற்பனை செய்திருக்கலாம்.

        

இக்கதையில் அழிவு ஒன்றே தான் பிரதானமாக இருக்கிறது. பிரளயதேவி சிலையைப் பற்றியும் அதன் கண்கள் திறக்கப் பட்டவுடன் பிரளயம் தொடங்குவது மற்றும் மகா காசியபர் பற்றிய பகுதிகள் மட்டுமே மிகுந்த உயிர்ப்புடன் இருக்கின்றன. விஷ்ணு சிலை கட்டப்பட்டதைப் பற்றியோ, வழிபாடுகள் பற்றியோ, பிரம்மாண்ட கோவில் எழுந்ததைப் பற்றியோ, பலமுறை பிரளயம் அழித்த கோவில் எப்படி மீண்டது என்பதைப் பற்றியோ எதுவுமே இல்லை (ஜெயமோகனின் சிறுகதையான ‘காடன் விளை’ என்ற கதையில் காடன் அந்த ஊரை ஆறு முறை அழிக்கிறார் என்று படித்ததும் அந்த கதையைப் பாதியில் மூடி வைத்துவிட்டேன்). மிகச்சில குறிப்புகள் மற்ற கதை பாத்திரங்கள் மூலமாக போனால் போகிறது என்று அரைகுறையாக சொல்லப் படுகிறது. மற்றபடி ஆக்கப் பூர்வமாக கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லாத விஷ்ணுபுரம் அழிவை மட்டுமே முன்வைக்கிறது.

என் பல கீச்சுலக நண்பர்கள் ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்பதை அறிவேன். விஷ்ணுபுரத்தில் அழகோ, ஆக்கமோ, வெற்றி பெறத் தூண்டும் எண்ணங்களோ இல்லை. இவற்றில் ஆராதிக்கப்படுவதெல்லாம், அழிவு, பயம், தோல்வி மனப்பாங்கு, காமம் இவை மட்டுமே. இவற்றைத் தொடர்ந்து படித்தால் இதே எண்ணங்கள் அவர்களைப் பீடிக்கக் கூடும் என்றே பயப்படுகிறேன். அடுத்து இந்த உலகத்தையே அழிப்பது போன்ற கதைகளை அன்னார் எழுதக் கூடும் என்று எண்ணி எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
ரேணுகா

Advertisements

12 thoughts on “விஷ்ணுபுரம் -கருத்துகளும் விமர்சனங்களும்!

 1. சில வருடங்களுக்கு முன்பு படித்த புத்தகம். படித்து முடித்து பல நாட்கள் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வால் பீடிக்கப்பட்டிருந்தேன். (ஆயிரத்தில் ஒருவன் பார்த்தபோதும் இதே போல் ஒரு விளைவு) நடு இரவில் விழிக்கும் போதெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு pleasant ஆன உணர்வை ஏற்படுத்த இயலா எந்த கலை வடிவமும் வீண்தான்.

  நல்ல விமர்சனம். மற்றபடி அந்த கருப்பு நாயை மேதை முதல் பேதை வரை அனைவரையும் ஒரு நாள் நெருங்கும் மரணத்தின் உருவகமாகவே பார்க்கிறேன்.

  1. ஒரு pleasant ஆன உணர்வை ஏற்படுத்த இயலா எந்த கலை வடிவமும் வீண்தான்.// 100% உண்மை..
   நன்றிகள் பல.. :))

 2. உஷ் அப்பா விமர்சனமே கண்ணக் கட்டுதே!
  அருமையான விமர்சனம் 🙂 எனக்கு இந்த மாதிரி கதைகளைப் படிப்பதில் துளியும் விருப்பம் கிடையாது. அதனால் உங்க விமர்சனம் படித்ததே போதுமானதாக இருக்கு. ஆனாலும் அசாத்திய பொறுமை உங்களுக்கு :-))

  amas32

  1. இந்தக் கதையில் ஒரு ஈர்ப்பு இருக்குங்க மா.. பாதியில் மூடி வைக்க முடியல. நன்றி.. 🙂 🙂

 3. உண்மைல அசத்திட்டய்யா..என்ன ஒரு மெமரி, விவரணைகள்..சொல்லவந்ததை சரியாய் சொல்லும் கன்விக்‌ஷன்..வாழ்க நின் வாசிப்பு பழக்கம் 🙂

 4. நூல்களை முழுமையாக படித்து வருடங்களாயிற்று. புத்தகபுழுவாக இருந்தவன்தான். இன்று நேரமில்லை. அதனால் விஷ்ணுபுரத்தை படிக்கவில்லை. உங்கள் மூலமாக அறிந்துகொண்டேன். பாரபட்ச்சமில்லாமல் அக்குவேரா ஆணிவேரா ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள் என்பதை நான் உணருகிறேன். கண்மூடித்தனமா நீங்க யாருக்கும் விசிறிவிட வேண்டிய அவசியமில்லை என்பதை அறிகிறேன். அதனால் பயமில்லாமல் நேர்மையுடன் விமர்சித்து உள்ளீர்கள்.

  “மற்றபடி எல்லா கதாநாயகர்களும் ஒவ்வொரு கணிகையர்களால் ஞானம் பெறுகிறார்கள். கற்பு நெறி தவறியவர்கள் எல்லாரும் ஞானம் பெறுகின்றனர். ஓரினச் சேர்கையாளர்கள் பெரிய ஞானிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். வித்யார்த்திகள் யாருக்குமே ஞானமோ, தியானமோ கை கூடுவதில்லை. ” –
  வேடிக்கையாக உள்ளது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.(இதுபோன்று பல இடங்களில் உங்கள் கருத்துக்களை எடுத்து மேற்கோள் காட்டலாம். இடம் போதாது)

  தன் நூல் இளம் வயதுடையோரை கவருவதர்க்கும் தன் ஆழ்மனதில் உள்ள அரிப்பை வெளிக்காட்டுவதர்க்கும் கதாசிரியர் பயன்படுத்தயுள்ளார் என்று நன்றாகவே தெரிகிறது.

  உங்கள் விமர்சனம் அருமை. கதாசிரியரே பதில் சொல்ல முடியாதபடிக்கு உள்ளது. உங்கள் மீதுள்ள மதிப்பு என்னில் கூடுகிறது. வாழ்க வளர்க.

 5. மொக்க புத்தகம்னு சொல்ல வேண்டியதை எவ்ளோ நீட்டி முழக்கி சொல்லி இருக்கிங்க இதே தான் அங்கையும்…..அதனால் ஜெய மோகனை குற்றம் சொல்ல வேண்டுமெனின் முதலில் உங்களை குற்றம் சொல்ல வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s