காவல் கோட்டம் – ஒரு அனுபவம்

6b9d8e4a0a6111e39ad122000aa8027e_7
காவல் கோட்டம்.
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
பக்கங்கள் : 1048
விலை: ரூ.590/-
பதிப்பகம் : தமிழினி
சாகித்திய அகடமி விருது பெற்ற ஆண்டு : 2011
வாசிப்பு அனுபவம்:
இந்த நூலில் என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்றே வாசிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அறுபது நாட்கள் நான் படித்த ஒரே புத்தகம் இதுதான் (பாடநூல்கள் தவிர்த்து). பாதி நாட்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக ஆயிரம் பக்கக் கதைகள் பெரிய எழுத்துகளாக இருக்கும், விரைவாக பக்கங்களைக் கடந்துவிடலாம். இதில் முழுதும் சின்ன எழுத்துக்கள், அதனால் பக்கச் சக்கரங்கள் நகர்வதில் ஏகப்பட்ட சண்டித்தனங்கள். போகப்போக நினைவில் வைத்துக் கொள்ள முடியாத கதாபாத்திரங்கள், வாசிப்பில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள். இது தனிமனிதக் கதை அல்ல, ஆறு நூற்றாண்டுகளின் கதை, மதுரையின் கதை மற்றும் அதன் ஊடுபாவாகச் செல்லும் கள்ளர்களின் வாழ்க்கை. நாவலின் போக்கு பிடிபடத் தொடங்கியதும் வாசிப்பு வசமானது, சண்டி மாட்டுவண்டிப் பயணம் குதிரைப் பயணமாக மாறி மகிழ்வித்தது.
வாழ்த்துக்கள்:
முதலில் இந்நூலின் ஆசிரியர் திரு. சு. வெங்கடேசனுக்கு என் வாழ்த்துக்கள். எத்தனை கடின உழைப்பும், பொறுமையும் இந்த நூலின் கட்டமைப்புக்கு தேவைப்பட்டிருக்கும் என்று உணரமுடிகிறது. இதை வெறும் கதை இல்லை, ஒரு மைல்கல். திரு எஸ்.ராமக்கிருஷ்ணனின் “ஆயிரம் பக்க அபத்தம்” விமர்சனம் அதை உறுதி செய்கிறது.  
காவல்கோட்டத்தில் பெண்கள்:
இந்த நூலில் என்னைப் பெரிதும் ஆச்சரியப் படவைத்தது பெண்களைப் பற்றிய இயல்பான செய்திகள். ஆம், கதைகள் அல்ல, செய்திகள். காவலும் களவும் ஆண்கள் சம்பத்தப்பட்டது என்றாலும் பெண்கள் வரும் பகுதிகள் பெரும் உத்வேகத்தைத் தருகின்றன. முதல் அத்தியாயத்தில் முகலாயர்களின் தாக்குதலின் போது, பிள்ளைத்தாச்சி சடச்சி குற்றுயிராகக் கிடக்கும் தன் கணவனிடம், சண்டையிட்டு வெல்லமுடியாது என்று தெரிந்தும் ‘காவல்காரன் உயிரோடு இருக்கும் வரை களவு நடக்கக் கூடாது’ என்று ஆயுதம் கொடுத்தனுப்புகிறாள். அவள் தான் கள்ளர்குடிகளின் தாய், அவள் பிள்ளைகளே காவல் கோட்டத்தின் கதாநாயகர்கள்.
கங்காதேவி எனும் கதாபாத்திரம், கணவன் கம்பணனுக்கு இணையாக குதிரையேறி படைகளை தலைமையேற்று சென்று முகலாயர்களிடமிருந்து மதுரையை மீட்டு, மதுரா விஜயம் எனும் நூலை எழுதுகிறாள். கனகநூகா எனும் பெண் தன் குலம் போரில் வெற்றி பெற தன்னை பலி தரும் காட்சி பெண்களின் வீரத்தை பறை சாற்றுகிறது. காதலாகிக் கடிமணம் புரிந்து கணவன் ரணதீரன் எனும் புகழ்பெற்ற விஸ்வநாதனின் கடமைகள் யாவிலும் துணையிருந்து,  அவன் இறந்த பின் அதே காதலோடு உடன்கட்டை ஏறும் வீரநாகம்மா இன்னொரு பிம்பம். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏற மறுத்து அரசாட்சி ஏற்கும் மங்கம்மா புரட்சியின் உருவம் என்றால், புகழ் பெற்ற சாளுவக் கட்டாரியை ஒரு தாழ்ந்த சாதி வீரனிடம் கொடுத்து அவன் வீரத்தை பெருமைப்படுத்துவது சிறப்பு.
தாது பஞ்சத்தில் தன் வீடு முதற்கொண்டு விற்று வருடமுழுதும் அப்பகுதி மக்களின் பசி தீர்த்த  தாசி குலப்பெண் குஞ்சரத்தம்மாள், பெண்களின் தாய்மையை மெய்ப்பிக்கிறாள். தன் குலத்தை நாசமாக்கத் துடிக்கும் ஐரோப்பியர்களைக் கொன்று குவிக்கும் கழுவாயி, தன் மக்களை வதைக்கும் காவலனை கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் வீராயி, ஜல்லிக்கட்டுக் காளைகளையும், கட்டு சேவல்களையும் ஏவி வெள்ளையர்களை தாக்கியதோடல்லாமல், ஒரு வெள்ளைக் காரனைக் கழுத்தைக் கடித்துக் குதறி கொல்லும் அங்கம்மா கிழவி, எனப் பல கள்ளர் குலப் பெண்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதம், பெண் சிங்கங்களின் வசீகரம். இந்த நூலில் பெண்கள் யாருக்கும் பயப்படாதவர்களாகவே இருக்கின்றனர். கிழவிகள் பேசிக்கொள்ளும் பெரியோர்க்கான நகைச்சுவை உரையாடல்களால் ஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தையே கலாய்த்துத் தள்ளுகிறார்கள். நான் நெல்லுச் சோத்துக்கு வெஞ்சனம் கேக்கற தாதனூர்க் காரிடி என்று பக்கத்து ஊர்க்காரிகளை பேச்சில் மிஞ்சுகிறார்கள்.
காவலும் களவும்:
டில்லி படையிலிருந்து தப்பிய சடச்சியின் வழிதோன்றல்கள் கள்ளர் பரம்பரையாக தாதனூர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தாதனூர் கிராமக் கள்வர்களின் வாழ்க்கை தான் காவல் கோட்டம். களவு அவர்களின் குலத் தொழில். திருமலை நாயக்கர் கோட்டையில் களவாடி ராஜ முத்திரையை எடுத்த கெட்டிக்காரத்தனம் அவர்களுக்கு மதுரைக் கோட்டையைக் காவல் காக்கும் பொறுப்பைப்  பரிசாகப் பெற்றுத் தருகிறது. அந்தப் பெருமையுடன் அவர்கள் வழிவழியாக கோட்டையைப் பாதுகாத்து வருகிறார்கள். காவல்கூலி அவர்களின் வாழ்வாதாரமாக மாறுகிறது. காவல்கூலி அல்லது காவல் அதிகாரத்தைக் கைப்பற்ற மற்றும் தக்கவைத்துக் கொள்ள களவைக் கையிலெடுக்கிறார்கள்.களவு காவலாகவும், காவல் களவாகவும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும் திறம் படைத்தது. நிரம்பவே நிரம்பாத கண்மாயும், வறண்ட நிலமும் அவர்களுக்கு களவைத் தவிர வேறு வழிகளைத் திறப்பதில்லை. களவு மட்டுமே அவர்களின் உழைப்பு. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, களவாடும் துணிச்சல், காவல் காக்கும் பெருமிதம் இவையே அவர்களின் வாழ்க்கை.
 
கள்ள நாட்டு மக்கள் சாவைப் பற்றி துளியும் எண்ணி வருந்துவதில்லை, தடுமாறுவதில்லை. மாயாண்டி, விருமாண்டி, ஒச்சு, ஆங்கன், சின்னான், சுழியன், சுக்கு, கட்டையன், எனப் பல பெயர்கள் இருந்தாலும் களவாடப் போகையில் அனைவரும் தங்கள் குரலைத் தொலைத்து கருப்பன் எனப் பெயர் கொண்டு இருளுடன் நடக்கத் தொடங்குவர். அவர்களின் ஓட்டத்தின் வேகம், குறி தவறாமல் கல்லெறிந்து சண்டையிடும் வேகம், களவு குலைந்து விட்டால் சடாரென பின்வாங்கும் விவேகம் அனைத்தும் அழகான வர்ணனைகள். இந்த புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் என்னைச் சுற்றி நான்மாடக் கூடலில் திடுதிடுவென இருளதிர கள்ளர்கள் ஓடித்திரிவதாக தோன்றும். கள்ளர்கள் ஊரின் பசி தீர்க்க மட்டுமே திருடுகிறார்கள். விலை மதிப்புள்ள பொருட்கள் திருடுவது துப்புக் கூலிக்காக மட்டுமே, அவர்களின் துப்புக் கூலியும், காவல் கூலியும் கிடைத்தவுடன் அவை பத்திரமாக உரியவர்களிடம் ஒப்புவிக்கப் படும். கூட்டமாகக் களவுக்குச் செல்வது தான் அவர்கள் வழக்கம். அத்தகைய கூட்டத்துக்கு கொத்து என்று பெயர். ஒவ்வொரு கொத்திலும் நிலையாள் என்று ஒருவனுண்டு. அவன் தான் கொத்தை நடத்திச் செல்வான். ஒவ்வொருவரிடமும் உள்ள கம்பு, நிலையாள் கம்பு, நொண்டிக் கம்பு, காவல் கம்பு, ஊண்டு கம்பு என்று செய்யும் வேலைக்கேற்ப பெயர் பெறுகிறது.
 
அரியலூர் ஜல்லிக்கட்டில் ஊர் மானத்தைக் காக்க, ஒரு கிழவனும், சிறுவனும் (மற்ற ஊர்க்காரர்கள் வருவதற்குள் இந்த சம்பவம் நடந்து விடுகிறது) சேர்ந்து காளையை அணைந்து உயிர் துறப்பது நமக்குள்ளும் வீர உணர்வுகளை விதைக்கிறது. தாதனூர்க் கிழவர் ஒருவர் ஒரு மல்யுத்த வீரரான ஜமீன் வீட்டில் திருடச் செல்லும் பொது களவு குலைந்து, மல்யுத்த வீரரின் தாக்குதலைத் தடுத்து வெளியேறுகிறார். அவர் வீரத்தை மெச்சி வைதீகக் கோவில் தேர்த்திருவிழாவில் அவரின் பரம்பரைக்கு பரிவட்டம் கட்டும் முதன் மரியாதையை அளிக்கிறார் ஜமீன். இளவட்டக் கள்ளன் கட்டையன் நான்கு ஆடுகளை திருடி தோளில் சுமந்து வந்து ஊர்ப் பசியைத் தீர்க்கிறான். விளைந்த நிலங்களில் கருது கசக்குவது, கிடைகளில் ஆடுகளை திருடுவது, சாலையோரங்களில் வண்டிகளில் மூடைகளைத் திருடுவது, கன்னம் போட்டு வீடுகளில் கொள்ளையடிப்பது எனப் பல வகைகளில் திருடுகிறார்கள். இந்த சம்பவங்களை ஆசிரியர் விவரிக்கும் விதம் சுவாரசியம். களவாடப் போன இடத்தில் கட்டுவிரியன் பெருவிரலைத் தீண்டிவிட தன் பெருவிரலை வெட்டி விட்டுத் தப்பி வரும் இடம் திகில். ராஜ களவாக தில்லை செட்டியார் வீட்டில் திருடும் நூற்றுப்பத்து பவுனைச் சொல்லலாம். அதைத் திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே திருப்பிக் கொடுத்து ஊருக்கு கொஞ்சம் தானியம் மட்டும் அனுப்புங்கள் என்று கூறும் இடம் நெகிழ்ச்சி. என்ன நேர்ந்தாலும் களவாடப் போன இடத்தில் யாரையும் கொல்லக்கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு.
 
தாதனூர் மக்கள் களவுக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. அவர்களாக அமைத்துக் கொண்ட எந்தக் கட்டுப்பாடுகளையும் அவர்கள்  மீறுவதில்லை. உயிரைக் கொடுத்தேனும் ஊர்க் கட்டுப்பாடுகளைக் காக்கிறார்கள். கருப்பன் கோவிலும், பட்ட சாமிகளும், அமண மலையும், ஆடுறிச்சான் பாறையும், தீர்த்தங்கரர் கோவிலும், நிரம்பாத கண்மாயும், சடச்சி பொட்டலும், ஆலமரக் கூட்டமும், கொம்பூதிப் புளிய மரமும், ஊர் மந்தையும் நம் கண் முன்னே விரிகின்றன. தாதனூர்ப் பெண்கள் காது வளர்க்கும் வழிமுறைகள், திருமணச் சடங்குகள், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் வைக்கும் வித விதமான போட்டிகள், “நல்ல நாள்” (திருவிழா) நடத்தும் முறைகள், திருமணத்துக்கு மீறிய தவறான தொடர்பைக் கண்டறிந்து ஊர் அவர்களுக்குத் திருமணம் (அறுணாக்கயிற்றில் சரடு கட்டும் முறை) செய்விப்பது, குழந்தை பேறு, குழந்தை பிறந்தபின் அதற்கும் வரி கட்டுவது, எந்தவொரு காரியம் தொடங்கியதும் ஊருக்கு வரி கட்டுவது, மக்களைக் காக்கும் கொம்பூதியின் குடும்பத்துக்கு உரிய மரியாதையை கொடுப்பது, ஊருக்காக இறந்தவர்களின் சந்ததிக்கு மரியாதை செய்வது, ஒத்து வராத திருமணத்தை முறித்து வைப்பது, சிறு குற்றங்களுக்கு அபராதம் கட்டுவது என்று இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை மண்ணின் மனம் மாறாமல் சொல்லியிருப்பது படிக்கப் படிக்கத் திகட்டவில்லை.
வெள்ளையர்களின் ஆதிக்கம்:
வெள்ளையர்கள் மதுரையை ஆக்கிரமித்துத் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியதும் தாதனூர்க் கள்ளர்களின் போதாத காலம் ஆரம்பமாகிறது. வெள்ளையர்கள் எல்லையில் இவர்கள் காவல் காப்பதைத் தடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், மக்கள் இவர்களை ஆதரித்து காவல் கூலி கொடுத்து வருகின்றனர். நிதர்சனம் என்னவென்றால் இவர்கள் இல்லாமல் மதுரை நகரை கொள்ளையர்களிடம் இருந்து தப்புவிப்பது கடினம். ஆனாலும் வெள்ளைய அரசாங்கம், பல அதிகாரிகளை நியமித்து ஒரு காவல் நிலையம் தொடங்குகிறது. மதுரை மக்கள், பலர் காவல்கார வேலையில் அமர்கிறார்கள். தாமரை மொக்கு போல இருக்கும் மதுரைக் கோட்டையை ப்ளாக்பர்ன் எனும் அதிகாரி இதழ் விரிப்பதைப் போல பல சூழ்ச்சிகள் கையாண்டு தகர்த்தெறிரிகிறான். அதிகாரிகள் பல விதமான உத்திகளைக் கையாண்டு கள்ளர்களை ஒடுக்க முனைகிறார்கள். அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களில் பலர் அழிகிறார்கள். வேதனை கிராமத்தை சூழ்கிறது. பலரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிறை அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது, நல்ல சாப்பாடு போடுகிறார்கள், கொஞ்ச நாள் நன்றாக இருந்துவிட்டு வரட்டும் என்று  தன் சகாக்கள் சிறைக்குப் போவதைப் பற்றி அப்பாவித் தனமாகப் பேசிக் கொள்கிறார்கள்.
இப்படியாக இருக்கையில், நகரம் தாதுப் பஞ்சத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையில் கடக்கிறது. பல பேர் வறுமையில் சிக்கி சிறிதளவுக் கஞ்சிக்காக வெள்ளைக்காரன் கட்டும் அணைக்கட்டு கட்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். கடுமையாக வேலை வாங்கப் படுகிறது. பல மக்கள் கங்காணிகளால் காப்பித் தொட்டங்களுக்கு பல மைல்கள் கடத்தி அழைத்துச் செல்லப் படுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு மக்கள் செல்லும் வழியிலேயே மறிக்கின்றனர். நகரில் காட்டன் மில் ஒன்று தொடங்கப்பட்டு குறைந்த கூலிக்கு கொத்தடிமைகள் போல் நம்மக்கள் வேலை செய்யத் தொடங்கினர். செட்டியார்களும் பிள்ளைகளும் துணிக் கடைகளைத் தொடங்கினர், நெசவாளிகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். இரவு தொலைந்து, மக்கள் ஷிப்டுகளை கடிகாரமாகக் கொண்டனர். எந்நேரமும் நகரத்தில் ரயிலோசையும், காட்டன் மில்லின் ஓசையும் கேட்கத் தொடங்கியது. இருளையும், மௌனத்தையும் துணைக்கழைத்து களவாடும் கள்ளர்களின் வாழ்க்கை சத்தமின்றி கண்ணீர் வடித்தது.
 
கள்ளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியபடியே களவாடிக் கொண்டிருக்கின்றனர். கள்ளர்குடியில் பிறந்து கிறித்துவர்களால் வளர்க்கப்பட்ட டேவிட் சாம்ராஜ் கள்ளர்களுக்கு பல சட்ட ஆலோசனைகளை வழங்கி, குணசீலன் என்னும் வழக்கறிஞரின் துணைக் கொண்டு கள்ளர்களுக்குப் பல உதவிகளை செய்கிறார். இருப்பினும் அவர்களைக் காக்க முடியவில்லை என்னும் குற்ற உணர்வுகளுடன் மரிக்கிறார். ஊர் இவரின் மரணத்துக்கு பெரிதாக அதிர்ந்து போகிறது. தாதுப் பஞ்சமும், கொள்ளை நோய்களும் பலரைப் பலிகொண்டு செல்கிறது. கொள்ளை நோய் வந்த கிராமத்தையே தீயிலிட்டுக் கொளுத்தி, எஞ்சியவர்களை சுட்டு கொள்ளும், அரசாங்கக் காவலர்களைக் கூட ரகசியமாக கொன்று நோயை விரட்டுகிறது ஆங்கிலேய அரசு.

மேலூர் கள்ளர்கள் அணைக்கட்டு தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். தாதனூர்க் காரர்களுக்கு களவொன்றே கைகொடுக்கின்றது. குற்ற பரம்பரைச் சட்டத்தை அமுல்படுத்தி தாதனூரில் அவுட்போஸ்ட் ஒன்றைக் கட்டி முடிக்கிறது ஆங்கிலேய அரசு, அதற்கான மோதலில் மக்கள் பலர் மடிகிறார்கள். இதற்குக் காரணமானவர்கள் பலரை தாதனூர் கொன்று குவிக்கிறது. கடும் உயிர்சேதங்களுக்குப்பின் வெள்ளைக் காரனின் துப்பாக்கியின் பலம் தாதனூர் மக்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. தாதனூர்க் காரர்களுடன் நடக்கும் சண்டையில் வெள்ளைக் காரனுக்குப் பெரிதும் தோள் கொடுப்பது பிராமணர்கள் என்று ஒரு தனிக் கதை செல்கிறது. அனைத்து கள்ளர்களும் கணக்கெடுக்கப் படுகிறார்கள். கைரேகை பதியப் படுகிறது, கடவுச் சீட்டும் அனுமதியும் இன்றி எங்கும் செல்ல அனுமதி மறுக்கப் படுகிறார்கள். தாதநூர்க் காரர்கள் நகர்க் காவலை விடுத்து கிராமங்களில் காவல் ஏற்கின்றனர். பல கள்ளர்கள் குடும்பம் குடும்பமாக அழைத்துச் செல்லப் பட்டு பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். கிறிஸ்துவம் அவர்களுக்கு புகட்டப் பட்டது. தாதனூர் அவுட்போஸ்ட்டில் தினமும் இரவுகளில் மூன்று முறை மக்கள் தொகை கணக்கிடப் படுகிறது. விசில் சத்தம் கேட்டதும் காடதிர ஓடிச் சென்று ஆஜர் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தோல் உரியும் வரை சவுக்கடியும், சிறை தண்டனையும், பக்கத்து கிராமங்களில் நடக்கும் திருட்டுக்கு பழி ஏற்று சிறைக்குச் செல்லும் நிலையும், யாருக்கும் கண் கலங்கும். இந்த நிலையிலும் மக்கள் பசியை தீர்க்க இரண்டு விசில் சத்தங்களுக்கு நடுவே பல கொத்துக்கள் மின்னல் வேகத்தில் சென்று களவாடும் கணங்கள் சுவாரஸ்யமானவை.

காவல் கோட்டம்- எனது பார்வையில்:
பக்கங்கள் தீரும் வரை கள்ளர்களின் சாமர்த்தியத்தைப் பற்றிக் கூறி நாவல் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் இருந்திருக்கலாமே என்று எண்ண வைத்துவிட்டார் ஆசிரியர். நாவல் முடிந்து விட்டாலும் அந்த மக்கள் நம் மனதை விட்டு என்றும் நீங்கார். அவர்களின் வீரத்துக்காக அவர்களை ராணுவத்தில் சேர்க்கலாமே என்ற ஒரு யோசனையும், அவர்களின் ஒழுக்கம் பற்றிய சந்தேகத்தால் அரசாங்கம் நிராகரிப்பதாகவும் நாவலில் வருகிறது. ஆயிரம் பக்கங்கள் முதலில் மலைக்கவைத்தாலும், படிக்க ஆரம்பித்த பின் திகட்டாமல் எழுதிச் சென்ற விதம் சிறப்பு. தூய தமிழ் சொல்லாடல்கள், கள்ளர்களின் பேச்சுமொழி, கிழவிகளின் சொலவங்கள், இடையிடையே நிஜ நிகழ்வுகளையும், கடிதங்களையும் இணைத்திருக்கும் நேர்த்தி, அனைத்தும் அருமை. தூய தமிழில் இருக்கும் நடையில் திடீரென “லாங்க்ளோத் வேஷ்டிகள்”, “விசில்” என்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆரம்பத்தில் வரும் துலுக்கர்கள், நாயக்கர் வரலாறு எல்லாம் தவிர்த்திருக்கலாம் அல்லது சுருக்கமாக சொல்லி இருக்கலாம். கதாபாத்திரங்களை நினைவில் கொள்ளுவது மிகவும் கடினமாக உள்ளது, தேவையற்றவை என்றாலும்.

பெரியாம்பிளைகளும், பெரிய கிழவிகளும், ஊரே சேர்ந்து கலகலப்பாக இருக்கும் காட்சிகளும் கருத்தை விட்டு என்றும் அகலாது, பொறாமை கொள்ள வைக்கிறது. மச்சமின்றி பாம்படங்களை களவாடிச் சென்ற செங்கன் பாத்திரம், அதற்கு ஊரின் எதிர்வினை பற்றிய வர்ணனைகள் கலக்கல். சின்னான் பற்றிய புதிர் இன்னும் எனக்கு விளங்கவில்லை. இப்போதேனும் யாரவது விளக்கினால் நன்றியுடன் இருப்பேன். சிலருக்கு மிகையான வர்ணனைகள், பலருக்கு ஒரு வரி வர்ணனை என ஏகத்துக்கும் விரவிச் செல்லும் கதையின் போக்கு சில இடங்களில் பிடிபடவில்லை. மக்களின் ஊகத்துக்கு என்று தன் ஆசிரியர் உரையில் வெங்கடேசன் குறிப்பிடுவது ‘எஸ்கேப்பிசமாக’த் தெரிகிறது. நிஜமாகவே இத்தனை பெரிய நிகழ்வுகளை இவர் ஒருவரே சேகரித்திருக்க முடியாது, உதவி செய்த பலருக்கும் நன்றி என்று ஒற்றை வாக்கியத்தில் நன்றி உரையை முடித்திருக்க வேண்டாமே. பல பக்கங்களை தேவை இல்லாததை வர்ணனைகளால் வீணடித்திருக்கும் ஆசிரியர் ஒரு இரண்டு பக்கம் ஒதுக்கி, அவர் குறிப்பெடுத்த நூல்கள், அதன் ஆசிரியர்கள் மற்றும் உதவி செய்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம்.

பின்குறிப்பு:

முதலில் நான் முன்னம் எழுதிய விஷ்ணுபுரம் பற்றிய பதிவைப் பற்றிக் கூறிவிடுகிறேன். இப்போது படிக்கும் போது, அந்த பதிவு கொஞ்சம் வருந்தச் செய்கிறது. புத்தகம் படித்தவுடன் தோன்றிய கருத்துக்களைக் கொஞ்சம் கூட வெளிப்பூச்சு இல்லாமல் எதிர்மறையாக எழுதிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஆகவே இந்த பதிவை கவனமாக எழுதினேன். படைப்பாளி பெரியவனா, படிப்பவன் பெரியவனா என்றால், படைப்பாளிக்கே என் ஓட்டு.

அன்புடன்,

ரேணுகா

Advertisements

34 thoughts on “காவல் கோட்டம் – ஒரு அனுபவம்

 1. உங்கள் விமர்சனத்தின் தூண்டுதலால் பல அலுவல்களுக்கிடையே 24 நாட்களில் படித்துவிட்டேன். இரவு 1.30 நான் முடித்தபோது. அதன் பின் என் மனம் மிகவும் கனத்துபோய்விட்டது. தூக்கம் வரவில்லை. ரெண்டு நாட்கள் படித்தவைகளை அசை போட்டேன். பின் மறுபடியும் வந்து உங்கள் விமர்சனத்தை படித்தேன். வியப்பு மேலிட்டது. அக்குவேறு ஆணிவேரா பகுத்தறிந்து விமர்சித்துள்ளீர்கள். எவ்வளவு மெனக்கெட்டு இருப்பீர்கள் !

  முதல் தடவை உங்கள் விமர்சனத்தை படித்தபோது, நீங்கள் என் ஒத்த வயதுடையோரா இருப்பீர்கள் என்று கருதினேன். ஆனால் சமீபத்தில் உங்களுக்கு திருமணம் என்றறிந்தபோது மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

  இந்த இளம் வயதில் இந்த நூல் உங்களை கவர்ந்து அதற்க்கு விமர்சனமும் எழுத தூண்டியது ஒரு அபூர்வமான விஷயம். பல விஷயங்கள் என்போன்று உங்களுக்கு புரிபடாது unless you are born and bought up at Madurai city.

  என்னால் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து படிக்கமுடிந்தது. ஏனென்றால் இந்த வரலாற்று கதையின் கடைசி காலக்கட்டத்தை மதுரையில் என் இளம்பிராயத்தில் கண்டுள்ளேன். என் தாத்தா தந்தைவழி மதுரை ஜெயிலில் வெள்ளைக்காரன் காலத்தில் ஜெயிலராக பணிபுரிந்தார். அவருக்கு உள்ளேயே பங்களா. வீட்டிலும், வீட்டை சுற்றியும் எடுபிடி வேலைக்கு ஏராளமான கைதிகள். என் தாத்தா மூலமும் கைதிகளின் மூலமும் ஏராளமான கதைகள் கேட்டஎன் பாட்டி பின் எனக்கு சொல்ல கேட்டுள்ளேன்.

  மற்றொரு தாத்தா என் அம்மாவின் நைனா, தன் பன்னிரெண்டரை வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மில் கட்டும்போதே வந்து வேலைக்கு சேர்ந்து தன் நூறாவது வயதில் இறந்தார். அதனால் எனக்கு மதுரையின் மேற்கே உள்ள ஏரியாவை மட்டுமல்ல பழைய நகரத்தின் வீதிகளும் அத்துபடி. அதனால் எனக்கு பரிச்சியமான மதுரை மற்றும் கள்ளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உணர்ந்து ரசிக்க ஏதுவாயிருந்தது

  மற்றபடி குற்றம் குறைகளை மிகைபடுத்தாமல் இருந்தது உங்கள் விமர்சனம். என் நிலையும் அதுவே. விமர்சனத்தை படித்த பிறகு, இதுதானா கதை, இவ்வளவுதானா கதை என்று புறம் தள்ளிவிடாமல், படித்தவர்களை, புத்தகம் வாங்கி படிக்க வைக்க தூண்டுதலாக அமைந்துவிட்டது உங்கள் விமர்சனம். அதற்க்கு ஒரு Hats off உங்களுக்கு. அப்படி விமர்சனம் எழுதுவது ஒரு கலை. அது உங்களுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டதை நான் பார்க்கிறேன். புத்தகத்தை பற்றிய விமர்சனம் உங்களுடைய கருத்தும் என்னுடையதே. அதனால் அதைப்பற்றி நான் எதுவும் கூற இயலவில்லை. ஆனால் நூல் ஆசிரியரை நிச்சயம் பாராட்டியே தீரனும். எவ்வளவோ நூல்கள் மதுரையை பற்றியும் கள்ளர்கர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் இருந்தாலும், அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து படிக்க இயலாது. எல்லாவற்றையும் சுருக்கமா சுவாரஷ்யமா எளிய முறையில் நூலாசிரியர் காவல் கோட்டத்தில் கொடுத்துள்ளார்.

  மீண்டும் நன்றி உங்களுக்கு. திருமண வாழ்க்கை என்றும் இனிதாய் இருக்க அந்த மீனாட்சியம்மனை வேண்டிக்கொள்கிறேன்.

  (நீங்க மதுரை பக்கமா? ஆவலாய் உள்ளேன். முடிந்தால் DM செய்யவும்.)

  1. உங்கள் கருத்துக்களால் என்னை பெரு மகிழ்ச்சி கொள்ளச் செய்துவிட்டீர்கள் ஐய்யா ..
   உங்கள் ஆசிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மிக்க மகிழ்ச்சி..:-)

 2. வழக்கம்போல் அருமையான விமர்சனம். அரவான் படம் பார்த்த பிறகு இந்த புத்தகத்தை படிக்கும் விருப்பம் ஏற்பட்டது. .நீங்கள் ஒன்றிப் போய் வாசித்திருப்பது தெரிகிறது. .நாம் வாழ்ந்திருக்க இயலாத ஒரு கால கட்டத்தில் கதை நிகழ்வதே இயல்பாக நம் ஆர்வத்தைக் கூட்டி விடுகிறது.

  புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன்.

  பிறகு விஷ்ணுபுரம் பதிவு பற்றி நீங்கள் வருத்தப்பட ஏதும் இல்லை. 🙂

  அடிக்கடி எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 3. எனக்கு உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை. பொறாமையாகவும் இருக்கிறது. நூல் வெளியானவுடன் கீச்சர் ஒருவர் (இப்போது காணோம்) அதை படித்துக்கொண்டே கீச்சில் பல விசயங்களை விவரிப்பார். அப்போதே அதை எப்படியாவது வாங்கி படித்துவிட வேண்டுமென்று ஆவலாயிருந்தேன். திருச்சியில் அப்பொழுது கிடைக்கவில்லை. அதன் பின் @iVedhaLam படித்துவிட்டு கீச்சினார். நெடுநாள் பிறகு அந்த நூலை பார்த்தேன். அதன் சைஸை பார்த்து மிரண்டுவிட்டேன். ஆவி. குமுதத்ததையே வாரா வாரம் ஒழுங்கா படிக்க முடியவில்லியே இதை எப்படி. ஏன் காசை வீணாக்க வேண்டுமென்று வாளாயிருந்துவிட்டேன். இப்போ திரும்பி என்னை உசுப்பி விட்டுள்ளீர்கள்.

  அருமையாக உங்கள் விமர்சனத்தை அளித்துள்ளீர்கள். உங்களின் கவனமான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. பாராட்டுகள். உங்கள் மீதான மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. மதுரையில் பிறந்து, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் காடு கரையெல்லாம் சுற்றியவன். அதனால் எங்கிருந்தாலும் மண்ணின் ஈர்ப்புடன் இருப்பேன். அந்நூலை படித்தபின் மீண்டும் உங்களோடு கலக்குறேன். நன்றி 🙂

  1. மிக்க நன்றி பாஸ்..
   என் மேல உள்ள அன்பால் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி. கண்டிப்பா படிச்சுட்டு மறுபடி வந்து உங்க கருத்தை சொல்லுங்க. :)))))))))))

 4. உன் படிப்பார்வத்துக்கும்,உழைப்புக்கும் வந்தனம்..கடைசி பத்தி ரொம்ப பிடிச்சுது..ஆமா படிப்பாளியா, படைப்பாளியான்னா, படைப்பாளி முக்கியம்..:)

  1. ஆமாம். நன்றிகள் பல.. :))))))))))) நீங்கல்லாம் தான் என்னோட ஆர்வத்துக்குக் காரணம் 🙂

 5. இதில் இன்னும் நிறைய உட்கதைகள் இருக்கிறது..சில விசயங்கள் இன்று மிக அதிர்ச்சியாக கூட இருக்கும்..குறிப்பாக சக்கிலியர்கள் குலம் பற்றிய விவரணை,அவர்களின் வரவு,அவர்களின் குலம் பற்றிய தகவல்கள்..இன்று நாம் ராஜபாளையத்து நாய் என்றழைக்கும் நாயின் போர் பங்கெடுப்பு, கள்ளர்கள் சிலரின் கட்டாய மதமாற்றம்,அதனால் அவர்களுக்குத் தொற்றிய “சுன்னத்” பழக்கம்..குறவர்களின் அன்றைய முக்கியத்துவம்,கிட்டத்தட்ட 150 காலம் கோவில் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு,பின் தேடி கண்டெடுக்கப்பட்டு கொண்டுவரப்படும் மதுரை மீனாட்சியம்மன் சிலை..அழகர் கோவில்..ஆமுக்த மால்ய- என்ற நூல் பற்றிய விவரனை..நாயக்கர் சரித்ரம்..அவர்களின் மதுரை வாழ்க்கை..விஜய நகர பேரரசின் தோற்றம்,ராயர்கள் வரலாறு,ராணிமங்கம்மா கதை,சுலதானின் துரோகம்..பாட்டி/பேரனுக்கிடையான ஊடாட்டம்,இன்றைம் காணப்படும் விளக்குதூணின் வரலாறு..மதுரை கோட்டை அழிந்த வரலாறு..கள்ளர்கள் சிறுக சிறுக ஒழிக்கப்பட்ட விதம்..என ஒரு மழை காட்டாறாக மாறி பல வழிகளில் பாய்வதைப்போல..இந்தநூல்..இந்நூல் மறுக்கப்பட்டாலும் சரி, போற்றப்பட்டாலும் நம் (இலக்கிய வாசகர்கள்) அளவில் ஒரு முக்கியமான நாவலே..அப்படியே நெடுங்குருதியையும் படித்துவிட்டீர்களானால் ஒரு பிடி கிட்டும்..

  1. உங்களின் விவரணைகள் என்னை வியக்க வைக்கின்றன. மிக்க நன்றிங்க. கண்டிப்பா அந்த நூலை படிக்க முயற்சி பண்றேன். நீங்க சொல்லும் விவரங்கள் எனக்கு ரொம்ப கடினமாக இருந்தது என்பதை கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறேன். :))

 6. இந்தப் புத்தகம் படிக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.அதனால் கடைச் சுருக்கம் படித்து சுவாராசியத்தைக் குறைக்க விரும்பாமல் பிறவற்றை மற்றும் ஊன்றிப் படித்தேன். மிகுந்த கவனத்துடன் எழுதிய ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. அதற்கு சோம்பல் படாமல் விமர்சனம் எழுதியதையும் பாராட்டுகிறேன்.அதனாலேயே இங்க கமெண்ட் போடணும்னு தோன்றியது. .
  அடிக்கடி புத்தகம் படிக்கிறதைப் பார்த்தா இந்த ஒரு விசயம் மட்டும் நமக்குள்ள ஒத்து வராது போலத் தெரியுதே :)) புத்தகம் முழுவதுமாகப் படித்துவிட்டு அப்போ எப்படி என் கருத்தும் எங்க கருத்தும் ஒத்துப் போகுதா என திரும்ப ஒருமுறை தேடி வந்து படிப்பேன்.
  உங்கள் எழுத்துநடை மிகவும் வசீகரிக்கிறது என்பதை பதிவு செய்துவிட்டு நடையைக் கட்டறேன் 🙂

  1. ரொம்ப நன்றிங்க உமா. அழகான கமெண்ட்.. கண்டிப்பா நம்ம கருத்து ஒத்துப்போகும் :)))

 7. இத மட்டுமே படிச்சிட்டு காவல் கோட்டம் படிச்சுட்டேன்னு தைரியமா வெளில சொல்லிக்கலாம் போலேயே…. ரைம்ஸ் ஒப்புவிக்கிற கொழந்த மாதிரி சொல்ல வந்தத மட்டும் சரியா சொல்லி இருக்கீங்க

 8. . மூன்றில் ஒரு பங்கு மக்கள் செல்லும் வழியிலேயே ம”றி”க்கின்றனர்.

 9. என்னிடம் இரண்டு கேள்விகள்.
  1. இந்த புத்தகம் மீண்டும் உங்களை படிக்க அழைக்கின்றதா?
  2. உங்கள் மனதில் இதுவரை படித்த புத்தகங்களின் தர வரிசை இருக்கும். இந்த புத்தகம் எந்த இடத்தில் உள்ளது?

  உங்களின் மனத் தேடல் நன்கு புரிகின்றது. முழு பதிவையும் படித்தேன். பல எண்ணங்களை, பல வண்ணங்களில் சொன்ன உக்தி அருமை.

  1. மிக்க நன்றி திரு. கார்த்தி..
   பதில் 1. நிச்சயமாக. இரண்டு மூன்று முறை சில பகுதிகளை மட்டும் படித்தேன்.
   பதில் 2. தரவரிசை எல்லாம் என்னிடம் இல்லை, ஆனால் மிகச்சிறந்த புத்தகமாகவே தோன்றுகிறது. இத்தனை ஆழமான வாசிப்பு வேறு எந்த புத்தகமும் எனக்குத் தரவில்லை.
   பதிவைப் படித்ததோடல்லாமல், என்னை மேலும் சிந்திக்க வைத்ததற்கு நன்றிகள் பல.

   1. Dear Mam

    There is no rules
    , fans only for the Writers, after reading your Kavalkottam criticize article the rules was changed I’m your big fan.I’m expecting your own stories soon.
    Dear all
    Need votes

 10. கதை சுருக்கம் மாதிரி இருக்கு விமர்சனம் ஒரு படத்துக்கு ட்ரைலர பாத்து என்ன கதைன்னு யூகிக்கிற மாதிரி, நன்றி __/\__ 🙂
  ஒரு விஷயம் மட்டும் சும்மா ஒரு கருத்து சொல்லனும்னு தோணுதுங்க அப்பத்தான நாமளும் பெரிய மனுசன்னு காட்டிக்க முடியும் அதுக்காக 😉 /////ராணுவத்தில் சேர்க்கலாமே என்ற ஒரு யோசனையும், அவர்களின் ஒழுக்கம் பற்றிய சந்தேகத்தால் நிராகரிக்கப் படுகிறது//////ராணுவத்துல சேர ஒரு குருட்டுத்தனமான வீரமும் மொரட்டுதனமான நம்பிக்கையும் போதும் ஒழுக்கம் அங்க போனா தானா வந்துரும் :-))))))

  1. ரொம்ப நன்றிங்க.

   அது என்னோட கருத்தில்லைங்க. அரசாங்கத்தின் கருத்தாக நாவலில் வருகிறது. நா எடிட் பண்றேன். :)))

 11. அருமையான விமர்சனம். நான் இந்நூலைப் படிக்கவில்லையென்றாலும், நாவலின் உள்ளடக்கத்தை ஊகிக்கமுடிகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது இந்நூலைப் படிக்க ஆசை.

 12. ரொம்ப நிதானமாக யோசித்து அழகாக எழுதியிருக்கும் ஒரு விமர்சனம். இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படித்துப் பொறுமையாகவும் எண்ணங்ககளைக் கோவையாகவும் எழுதியுள்ளீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள். முக்கியமாக புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது உங்கள் விமர்சனம்! Super 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s