அபிராமி அந்தாதி #13

பாடல்கள் 41-45

47468635

பாடல் 41:

(நல்லடியார் நட்புப் பெற)

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

பொருள்:

இப்போதுதான் பூத்துவிட்ட புதிய குவளை போன்ற மலர்க் கண்களுடைய அன்னையும், அன்னையின் பதியாகிய சிவந்த திருமேனியுடைய சிவனும் சேர்ந்து நமக்கு அருள்புரியும் பொருட்டு இங்கு தோன்றியுள்ளனர், அது மட்டுமல்லாமல், நம் சிரத்தில் அவர்களின் தாமரைப் பாதங்கள் பதித்து திருவருள் புரிகின்றனர். இத்தகைய சிறப்புப் பெற நாம் என்ன புண்ணியம் செய்துவிட்டோம் என்று நினைக்கையில் மனதில் வியப்பு தோன்றுகிறது.

பாடல் – 42.

(உலகினை வசப்படுத்த)

இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.

பொருள்:

அபிராமி அன்னையானவள், பேரெழில் கொண்டவள். அவளின் இடையானது படமெடுத்தாடும் நாகத்தின் முகம் போன்றது. ஒன்றுக் கொன்று இடமின்றி, பருத்தும், இறுகியும், இளகியும் இருக்கும் அன்னையின் முலைகளோ முத்துமாலை அணியப் பெற்று மலைகள் போன்று விளங்குகின்றது. குளிர்ச்சியான நல்மொழிகளையுடைய அன்னை வலிய நெஞ்சம் கொண்ட தன் பதியை தான் விரும்பும் வண்ணம் ஆட்டுவித்து தன் அடியவர்க்கு அருளச் செய்வாள், வேதங்களை சிலம்புகலாக்கித் தன் திருவடியின் சிலம்புகளாக அணிந்துகொண்டவள்

பாடல் – 43:

(தீமைகள் ஒழிய)

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

பொருள்:

தீய எண்ணங்களால், தேவர்களை வதைத்த, அசுரர்களை அச்சுறுத்தும் பொருட்டு முப்புரத்தை அழித்த வில்லாயுதம் ஏந்திய, சிவந்த நிறம் கொண்ட இறைவனின் இடபாகத்தில் இருக்கும் அன்னையானவள், தன் அழகிய பாதங்களில் சிலம்பணிந்து, பாசமும் அங்குசமும், ஐந்து மலர்ப் பாணங்களையும் கைகளில் ஏந்தி, இன்சொல் மொழியும் சிந்தூர வண்ணம் கொண்ட திரிபுரசுந்தரியாவாள்.

பொருள் – 44.

(பிரிவுணர்ச்சி அகல)

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

பொருள்:

இறைவியே, எங்கள் இறைவன் சங்கரனார் இல்லத்தின் மங்கலமே, அது மட்டும் அல்லாமல் அவருக்கு அன்னையும் ஆனவளே (பராசக்தி), ஆகையால் எல்லாக் கடவுளர்கும் மேலானவளே, இனி நான் உனக்கே உண்மைத் தொண்டு செய்வேன். துன்பங்களில் துவள மாட்டேன்.

பாடல் – 45:

(உலகோர் பழியிலிருந்து விடுபட)

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

பொருள்:

தாயே, உனக்கு பணிவிடை செய்யாமலும், பாதம் தொழாமலும், தன் இச்சைப்படி தவமியற்றி முக்காலமும் உணர்ந்த ஞானிகள் உள்ளனரோ, இல்லையோ, நானறியேன். ஆனால் அவ்வண்ணம் நானும் தன்னிச்சைப் படி செயலாற்றினால், அது வஞ்சகமோ அன்றி நல தவமா, தெரியவில்லை. அப்படியே நான் அவ்வாறு செய்தாலும் என்னை வெறுத்து விடாமல் பொருத்து அருள் புரிவாய் நீயே!

அன்புடன்,

ரேணுகா

Reference:

1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. http://www.comsys.com.sg/media/pdf/Abirami_Anthathi_Kannadasan.pdf

3. Image courtesy:

Goddess Abirami At Thippirajapuram Temple

http://placeandsee.com/s?as=foto&fp=47468635

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s