அபிராமி அந்தாதி #14

Sivan-Parvathi -with-Balya -Murugar-320x320

 

பாடல் – 46

(நல்நடத்தையோடு வாழ)

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

பொருள்:

வையத்து மக்களைக் காக்க ஆலகால விஷத்தை உண்டு, அதைத் தன் கழுத்தில் நிறுத்திக் கொண்டதால் கறுத்த தொண்டையுடைய சிவபிரானின் இடபாகத்தில் அமர்ந்த பொன் மேனியளே! செய்யக் கூடாத தவறுகளை செய்து விட்ட சிறியோர்களை, பெரியவர்கள் பொறுத்துக் கொள்வது புதிதல்ல, அவ்வண்ணமே, நான் அறியாமல் ஏதேனும் விரும்பத்தகாத செயல்களை செய்தாலும், நீ என்னைப் பொறுத்தருவாய் என்ற நம்பிக்கையில் உன்னை வாழ்த்தி வணங்குவேன்.

பாடல் -47

(யோகநிலை அடைய)

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

பொருள்:

இந்த உலகில் வாழும் வழி ஒன்று என் மெய்ஞ்ஞானத்தினால் கண்டுகொண்டேன். ஒருவர் மனத்தால் தியானிப்பதன் மூலம் இதைக் கண்டு கொள்ள முடியாது. இதன் தன்மைகளை எடுத்துக் கூறவும் முடியாது. ஏழு நிலங்களும், ஏழு கடல்களும், இவை அனைத்துக்கும் உயர்ந்த எட்டு மலைகளுக்கும் அப்பால், இரவு, பகலை ஏற்படுத்தும் சந்திர, சூரியர்களுக்கிடையே அமைந்து சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அபிராமி அன்னையை வணங்கும் வழியாகும்.

பாடல் -48

 

(உடல் பற்று நீங்க)

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

பொருள்:

ஒளிவீசிச் சுடரும், பிறைநிலவைத் தன் குன்றையொத்த சடாமுடியில் சூடிய சிவபிரானுடன் ஒன்றிப் படரும், சுகந்த மணங்கமழும் பச்சைக் கொடியான அபிராமித் தாயை தம் நெஞ்சத்தில் தியானித்து, இமைப் பொழுதும் நீங்காது இருக்கும் ஞானிகள் பிறவாநிலை எய்துவரே அன்றி, மீண்டும் இந்தத் தோலும், ரத்தமும், குடலும், தசையும் கொண்ட இந்த உடலை மீண்டும் அடையமாட்டார்.

பாடல் – 49

(மரணத் துன்பம் இல்லாதிருக்க)

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

பொருள்:

யாழ் மீட்டுகையில் தோன்றும் இசை வடிவமாய் நின்ற நாயகியே!! என் உடலினுள் உள்ள உயிரானது, என் ஆயுள் வரம்பு முடியும் தருவாயில் பிரமனின் ஆணைக்கிணங்கி என்னை நெருங்கும் கொடுமையான கூற்றினைக் கண்டு அச்சத்தால் மறுகும். அந்த வேளையில், அரம்பைரும், தேவ மகளிரும் சூழ வந்து உன் வளைக்கரத்தால் அஞ்சாதே என்று அபயமளிப்பாய் அன்னையே!

பாடல் -50

(அம்பிகையை நேரில் காண)

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

பொருள்:

உலகின் நாயகி, நான்முகம் கொண்ட பிரம்ம சக்தி, நாராயண சக்தி, தாமரைக் கரங்களில் ஐந்து மலரம்புகள் ஏந்தியவள், ஈசனின் துணைவி, இன்பம் தரும் சங்கரி, பச்சை நிறத்தினள், எழிலுடையாள், நாகத்தை சூடியவள்,உலகை அழிக்க வல்ல வராகி, சூலத்தை ஏந்திய சூலினி, மாதங்க முனிவரின் மகள் மாதங்கி என்று பல வடிவான அன்னையே, அனைத்துக்கும் ஆதி வடிவமான உன் திருவடிகளில் சரணடைகிறோம், அதுவே எங்களுக்கு பாதுகாப்பானது.

 

அன்புடன்,

ரேணுகா

 

Reference:

1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. http://www.comsys.com.sg/media/pdf/Abirami_Anthathi_Kannadasan.pdf

3. Image courtesy:

http://mantragoldcoatings.com/index.php?route=product/product&product_id=122

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s