எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

93c8a513d833187d6f6a01ad96d35e23_large

கோடைக்காலக் குயிலொன்று தன் குரல்வரிசையைக் காட்டி என்னை அழைத்தது. குயிலோசை தென்புற அறையின் ஜன்னலோர மாமரத்திலிருந்து வருவதை உணர்ந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டு அந்தக் கருங்குயிலைத் தேடினேன். சுகமான காற்று முகத்தில் மோத குயிலின் இரவல் வீட்டைப் பற்றிய கதைகளை ஒரு முறுவலோடு அசை போடலானேன். சுரீரென ஏதோ கடித்து என் எண்ணவோட்டத்தைத்  தடைசெய்தது. என்னவென்று பார்த்தால் எறும்புகளின் வரிசை மேல் கைவைத்திருக்கிறேன்.

காலையில் தான் சுவரோரம் எல்லாம் அடித்து வீட்டைத் துடைத்தேன், என்று எண்ணியபடியே எறும்புகள் செல்லும் திசையைக் கவனித்தேன். சுவரோரமாகவே அந்த அறையை சுற்றிக் கொண்டு முற்றம் முழுவதும் முழுமையாக ஒரு சுற்று சுற்றி சமயலறைக்கு சென்றது அவ்வரிசை. “இதென்னடா எறும்பு எப்படியெல்லாம் போகுது” என்று சமயலைறையை ஆராய்ந்தேன்.

அலமாரியின் மூன்றாவது அடுக்கில் கம்பு தானியம் வைக்கப்பட்டிருந்த சம்புடம் லேசாகத் திறந்திருந்தது. நம் எறும்பு வீரர்கள் அதற்குள்தான் நுழைந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் காலையில் கம்பு சாதம் செய்ய சம்புடத்தை எடுக்கையில் அங்கே எறும்பு இல்லை. சற்றுமுன் தான் வழி கண்டுபிடித்து நான் தரையைத் துடைத்ததால், தரை வழியை உபயோகிக்காமல் சுவர் வழியாக வந்திருக்கின்றன. “இந்த எறும்புக்கு ஓரறிவு என்றால் நம்பவா முடிகிறது!!” சம்புடத்தை எடுத்து தானியத்தை ஒரு முறத்தில் கொட்டி வெயிலில் வைத்தேன். மஞ்சளும் உப்பும் எடுத்து எறும்புப் பாதையில் தூவினேன். மறுபடியும் இரண்டு எறும்புகள் கடித்தன. மாலைத் தேநீர் நேரம் கணவரிடம் எறும்புகளைப் பற்றிய புகார்களுடன் கழிந்தது.

அடுத்தநாளும் எறும்புகள் இதே போல சுற்றுப் பயணம் செய்வதைப் பார்த்து “திரைகடலோடியும் தீனி தேடுதுகள்” என்று நினைத்தபடி ஏறும்புகளைத் தட்டிவிட்டேன். இன்று அனைத்து பாத்திரங்களையும் அழுத்தமாக மூடி வைத்திருந்ததால் அவை படையெடுத்த இடம் சமையலறை குப்பை டப்பா. குப்பையை மாலை ஒருமுறை பெருக்கிவிட்டுப் பின் தான் வெளியே எடுத்து செல்வது வழக்கம். ஆகவே அது எறும்புகளுக்கு வசதியாகிவிட்டது. இந்த முறையும் பல இடங்களில் கடி வாங்கினேன்.

அன்று அவர் வந்ததும் வராததுமாக பொருமித் தள்ளினேன். “எறும்புப் பொடி வாங்கிட்டு வாங்க, இல்லைன்னா சாக்பீஸ் மாதிரி எதோ இருக்காம், அது வாங்கிட்டு வாங்க” என்று அழமாட்டாத குறையாக எறும்பு கடித்து தடித்த கரங்களைக் காட்டினேன். அன்போடு என்னைப் பார்த்தவர், “எறும்பு கடிச்சத விட நீ சொரிந்து வைத்தது தான் அதிகமா தடிச்சுருக்கு” என்றவாறு தேங்காய் எண்ணையைத் தடவி விட்டார். உள்ளூர இதம் பரவிய போதும் “அந்த ஜன்னல் வழியா சாரி சாரியா எறும்புங்க வருதுங்க, சுத்தம் பண்ணாலும் மறுபடி வருது. எறும்பு மருந்து வாங்கி அந்த புத்துக்குள்ள போட்டுட்டா வராதில்ல” என்றேன் ஒரு கொஞ்சலோடு.

“இதுக்கு முன்ன இந்த மாதிரி எப்போ வந்தது” என்றார். “இந்த வீட்டுக்கு நான் வந்த ஆறு மாதத்தில் இப்போதுதான் இத்தனை எறும்புகள் வருகின்றன” என்றேன். “எறும்பு உன்னைத் தேடி வந்து கடிக்குதா” என்று மறுபடியும் கேட்டார். “இல்லப்பா நா அதுகளத் தட்டி விடும்போது தான் கடிக்குது” என்றேன் சிறிது எரிச்சலோடு.

“இங்க பாரும்மா, இது வெயில் காலம், எறும்புகள், எறும்புகள் இப்பத் தான் தனக்காக சேமிக்க முடியும், அதோட வேலை அது. அதைத் தொந்தரவு பண்ணாத அப்படியே விட்டிரு. குப்பையைத் தான கிளறுது, மத்த பொருட்களை பத்திரப் படுத்திக்கோ. நான் சில நேரம் கடலைப் பொட்டலத்தைப் பிரித்து எறும்புப் புத்துக்குப் பக்கத்துல போட்டிருக்கேன், என்னை எறும்புகள் கடிச்சதே இல்லையே” என்றார் சிரித்துக் கொண்டே.

“ம்கூம், நீங்க செஞ்சாலும் செய்வீங்க, எப்பக் கடைக்குப் போனாலும் நாய்களை எல்லாம் சேர்த்துக்கிட்டு பிஸ்கட் போடும் போதே தெரியும்” என்றேன். அவர் கூறியது உண்மை தான், மழைக் காலத்துக்கும்  சேமித்துவைக்கும் சுறுசுறுப்புத் திலகங்கள் அவை. திடீரென அவற்றின் மேல் ஏற்பட்ட வாஞ்சையால், ஒரு கைப்பிடிக் கடலையை அள்ளி ஜன்னலுக்கு வெளியே எறும்புகள் வரும் பாதையில் வைத்தேன். சில நாட்களாக குரல் மட்டும் காட்டி கண்ணாமூச்சி விளையாடிய குயில் என்னைப் பார்த்தவாறு கூவியது.

இப்போதெல்லாம் எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை.

Advertisements

19 thoughts on “எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

 1. ரொம்ப நாளா உங்க பெயர ரேனுகா ஜெயின் அப்படின்னு தான் படிச்சேன்(கெரகம் ஐ டெஸ்ட் பண்ணணும்) பரவாயில்லையே சேட்டு ஊட்டம்மா தமிழ்ல எழுதுறாங்களேனு?
  நான் எந்த ஸ்வீட் சாப்பிடறதுக்கு முன்னாடி ஜன்னல் ஒரம் கொஞ்சம் போட்டுவிட்டு தான் சாப்பிடுவேன் இல்லனா அடுத்த முறை படையெடுபுபு நடத்திடுவாங்கனு தெரியும்!
  உங்க பதிவு அருமை மேடம் 🙂

 2. அருமை இன்னும் பல கதைகள் எதிர்பார்க்கப்படுகிறது 👍:)

 3. இனிமை, especially the conversation between the husband wife 🙂 சின்ன சம்பவத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள் 🙂

  amas32

 4. உங்க எழுத்துக்கள் எப்பவுமே ஒரு சுவராசியத்தை ஏற்படுத்துகின்றன..சின்ன விசயத்தை அழகாக காட்சிப் படுத்திடறீங்க 🙂

 5. அருமையா சுவைபட சுவாரஷ்யமா இருந்தது. வாழ்க்கை பல அனுபவங்களை நமக்கு கற்றுகொடுக்கிறது.

  மூணாவது பாராவில் ஏழாவது வரியில் எறும்பு பாதை என்பதற்கு பதில் இரும்புபாதை என்று டைப்பாகி உள்ளது.

  இதுபோல அடிக்கடி எழுதுங்கள். வாழ்த்துகள் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s