எதிர் நீச்சல்

lion2

எப்போதும் போல் இன்றும் தாமதமாக சென்னை வந்தடைந்த கோவை எக்ஸ்பிரசில் இருந்து பயணிகள் இறங்கத் தொடங்கியதும் ரயில் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் வெகு வேகமாக நகரத் தொடங்கினர், ஏதோ ரயிலின் தாமதத்தைத் தங்கள் வேகத்தால் சரி செய்துவிடுபவர்கள் போல. மக்களின் வேகத்தில் தானும் உந்தப்பட்டவன் போல பரமுவும் நகர்ந்து அல்லது நகர்த்தப்பட்டு வெளியே வந்தான்.

ஓரிடத்தில் நின்று கை கால்களை அசைத்துக் கொண்டான். முன்பதிவு செய்யாமல் வந்த அவனுக்கு முண்டியடித்து இடம் பிடிக்கும் சாமர்த்தியம் போதவில்லை. ஒரு பெரியவர் கொடுத்த சிறிய இடத்தில் கால்களைக் குறுக்கி படிகளுக்கு அருகில் அமர்ந்து வந்தான். நிலையத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கழுவிக் கொண்டவனுக்குப் பசித்தது.

அருகில் இருந்த கடையில் ஒரு காபி எவ்வளவு என்றான். 25 ரூபாய் என்றவுடன் “டீ”ங்க, என வினவ, கடைக்காரர் எரிச்சலுடன் பால், காப்பி, டீ எல்லாமே 25 ரூபாய் தான் என்றுவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார். 25 ரூபாய்க்கு அவன் அம்மாவும் அக்காவும் எவ்வளவு நாட்கள் தறி நெய்ய வேண்டியதிருக்கும் என்று என்றெண்ணியபடியே வேண்டாமென்று விட்டு வெளியே வந்தான். அவன் பணத்தைக் கணக்கிடுவது அப்படிதான்.

சிறிது தொலைவில் ஒரு கடையில்  டீ 6 ருபாய் என்ற பலகையைப் பார்த்துவிட்டு நெருங்கினான். அந்த அதிகாலையிலும் கூட்டம் இருந்தது. அங்கேயே டீயும் இரண்டு பன்னும் சாப்பிட்டான். வழக்கமாக அது அவனுக்கு மதியம் வரை தாங்கும். அருகில் உள்ள பொதுக் கழிவறையில் முகம் கழுவி சட்டையை மாற்றிக் கொண்டான்.

இன்று அவனுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வு. பரமுவின் கருத்த முகத்தில் களையும் அப்பாவிக் களையும் சேர்ந்தே. நாமக்கல் பக்கத்தில் ஒரு சிற்றூரை சேர்ந்தவன். அக்காவின் படிப்பைத் தியாகம் செய்து அம்மாவும் அவளும் வீட்டில் தறி நெய்து இவனைப் படிக்க வைத்தார்கள். அப்பா சொற்ப ஊதியத்துக்கு ஒரு ஆலைக்குக் காவல் பணிக்கு செல்கிறார். படித்து முடித்து கோவையில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்கிற பரமுவின் தற்போதைய வருமானம் அறை வாடகை, உணவு போக ஊருக்கு அனுப்பப் போதுமானதாக இல்லை.

இவன் வேலை தேடி சென்னைக்கு வருவது இது ஆறாவது முறை. தன் அக்காவின் திருமணத்துக்கு பணம் சேர்க்கவே இவ்வாறு சென்னைக்கும், கோவைக்கும் அலைந்து கொண்டிருக்கும் பரமுவுக்கு வேறு பெரிய உந்துதல்களோ லட்சியங்களோ இல்லவே இல்லை.

அரை மணிநேரம் முன்னதாக நேர்முகத்தேர்வு நடக்கும் நிறுவனத்தை வந்தடைந்தான். இவனுக்குப்பின் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பல வண்ண உடைகளில் ஆண்களும் பெண்களுமாய் அந்த அறையை சுமார் 40 பேர் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களோடு தன்னைப் பொருத்திப் பார்த்தவன் தான் மட்டும் தனித்துத் தெரிவது போல் உணர்ந்தான். மற்றவர்களின் ஆடைகளின் நேர்த்தியையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் பார்த்தும் பார்க்காதவன் போன்றும் இருந்தவன் கைகள் மெலிதாக நடுங்கத் தொடங்கின. மனதளவில் தளர்ந்திருந்தவன் இன்றும் தோல்வியை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

பலமுறை தோல்வியைத் தழுவியவன் மீண்டும் அதையே எதிர்பாரத்து தன்னை ஆறுதல் படுத்தத் தொடங்கிவிட்டான். “இல்லாதவனுக்கு யாரும் எதுவும் தருவதில்லை”, “தன் வீட்டுச்சட்டியில் சோறு இருந்தால் தான் அடுத்தவீட்டுகாரன் சாப்பிடக் கூப்பிடுவான்” என்று அவன் தந்தை கூறும் எதிர்மறைச் சிந்தனைகள் அவன் காதுகளில் மோதிக் கொண்டிருந்தது.

“பரமேஸ்வரன்” என்று இரண்டாவது முறையாக வரவேற்புப் பெண் அழைத்ததும் திடுக்கிட்டு எழுந்தான். சம்பிரதாயமான புன்சிரிப்புடன் வழக்கமான விவரங்கள் கேட்டுவிட்டு உள் அறைக்கு அனுப்பினாள்.

சில்லென்ற காற்று முகத்தில் மோத பூக்களின் நறுமணத்தோடு திகழ்ந்தது அவ்வறை. மெத்தென்ற கார்பெட்டில் தன் கால் வைக்கக் கூசியவனாக சோபாவின் ஒரு ஓரமாக அமர்ந்தான்.

அந்த அறையும், பணியாட்களின் மலர்ந்த முகமும் அவனுக்குப் புத்துணர்வூட்டியது. அங்கே தான் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்ற முதன் முறையாக நினைத்துப் பார்த்தான். அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் எப்படி ரயிலேறி வந்தான் என்பதே அவனுக்கு இப்போதுதான் உரைத்தது.

இவன் தகுதிக்கு எங்கே நேர்முகத்தேர்வு நடந்தாலும் கலந்துகொள்வான். தோற்று பெருமூச்சு விட்டு, “கடிதம் அனுப்புவோம்” என்ற சொல்லுக்குக் காத்திருந்து பயணப்படி வாங்கிக்கொண்டு அதிர்ஷ்டம் இல்லை என நினைத்து ஊருக்குத் திரும்புவான் எப்போதும்.

இப்போதும் பெரிதாக ஒன்றும் மாறவில்லை. அந்த நிறுவனம் அவனுக்குப் பிடித்திருந்தது, அவ்வளவே. தனது சான்றிதழ்கள் வைத்திருந்த கோப்பை இறுக்கிப்பிடித்துக் கொண்டு சுவற்றோவியங்களைப் பார்க்கத் தொடங்கினான். எதேச்சையாக அவன் பார்த்த ஓவியம் அவன் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.

சிங்கம் ஒன்று ஒரு மானை தப்ப வழியில்லாமல் சுற்றி வளைத்திருந்தது. மானின் உடலில் சில சிராய்ப்புகள் இருந்த போதிலும் அதன் முகத்தில் தொய்வு இல்லை. நேருக்கு நேராக சிங்கத்தைப் பார்த்தபடி தன்னை நோக்கிய தாக்குதலுக்குத் தயாராக இருந்தது. அந்த படம் சொன்ன செய்தி அவன் மனதைத் தைத்தது.

பரமுவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. அவனுக்கும் நேர்முகத்தேர்வுக்கும் இடையில் இருப்பது சொற்ப வினாடிகளே. அவனுக்கான அழைப்பு வந்ததும் உள்ளே சென்று தலை நிமர்ந்து அமர்ந்தான். நான்கு பேர் கொண்ட தேர்வுக்குழுவை கம்பீரமாக சந்தித்தான். சிரித்த முகத்துடன் தெளிவாக பதிலிறுத்தான். அவன் தன்னைக் காலத்துக்கு ஒப்புக் கொடுத்தான். பிறந்தது முதல் கூடவே இருந்த தோல்வியுணர்ச்சியை உதறினான்.

முதன் முறையாக மனமகிழ்வுடன் கோவைக்குக் கிளம்பினான். அவனுக்குத் தன் அறையைக் காலி செய்ய வேண்டியிருந்தது. ஆம், நீங்கள் நினைப்பது போல் பரமேஸ்வரனுக்கு வேலை கிடைத்து விட்டது.

முடிவுரை:

இதில் வரும் சம்பவங்களில் பெரும்பான்மை என் நண்பர் ஒருவரின் அனுபவங்கள். இப்போது அவர் அக்காவுக்குத் திருமணம் செய்துவிட்டு வளைகுடா நாடு ஒன்றில் நல்ல வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Advertisements

15 thoughts on “எதிர் நீச்சல்

 1. Just happened to read this blog of you now. It was really great and I liked
  it very much. Your writing style has some life in it. Please continue your
  writing !!!

  Best wishes as always forever !

  Thanks,
  Easwar

 2. Just happened to read this blog of you now.

  It was really great and I liked it very much. Your writing style has some life in it. Please continue your writing !!!

  Best wishes as always forever !

 3. இது மாதிரியான கதைகள் ஏற்கனவே போதிலும் நண்பரின் அனுபவத்தை வைத்து அழகாக ஒரு கதையாக மாற்றி இருப்பது நன்று.உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது.நீங்கள் கோவை எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது என்று சொல்லும்பொழுது சுஜாதா அவர்கள் ஒரு கதையில் சொல்லுவார் “அந்த ஸ்டேஷனில் ரயில் போனால் போகட்டும் என்று நின்றது” என்று இருக்கும்,அனிச்சையாக ஞாபகம் வந்தது

 4. கொஞ்சம் வெளிப்படையா சொல்லனும்னா இந்த மாதிரி டைப் கதையெல்லாம் ரொம்ப வருசம் முன்னாடியே வழக்கொழிஞ்சாச்சி , அப்புறம் கொஞ்ச நாள் சிறுவர் மலர் , வெள்ளி மலர்ல வந்து இப்போ அதுவும் போயாச்சி ,எறும்புகள் என்னை கடிப்பதில்லை மாதிரியான ஒரு நல்ல நடைல எழுதிட்டு இது மாதிரி எழுதனுமா ?…..டொய்ங் டொய்ங் ,சுமரா தான் இருஞ்சி ஒரு வேளை என் சிற்றறிவுக்கு எட்டினது அவ்ளோ தானாவும் இருக்கலாம் …

  1. நீங்க சொல்றது உண்மைதான். கொஞ்ச கொஞ்சமா எழுதிப்பழகறேன் 🙂 நன்றி நவீன் 🙂

 5. அருமையாக கதை சொல்ல வருகிறது. வாழ்த்துகள்
  தோல்வியால் துவண்டுபோய் மனம் சோர்வடையாமல் தைரியம்மாக சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அருமையாக சித்தரித்துள்ளீர்கள். வாழ்க.

 6. சூப்பர் 🙂 கடைசியில் வேலை கிடைக்காம போயிடுமோனு பயப்படுற மாதிரி கொண்டு போய் சுபமா முடித்ததில் சந்தோஷம் !

 7. கதைகள் எல்லாம் முன்னமே எழுதி வைத்துஇருந்தீர்களா அருமை;)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s