சினேகிதி

friendship-31a

“உள்ளே வா உமா” என்று கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்தவாறு உள்ளே பார்த்து “ஜிராபி, ஹேய் ஜிராபி” என்று கூறிக் கொண்டே கதவைத் திறந்தாள் அஞ்சலி. குழப்பத்துடன் அண்ணாந்து பார்க்க எத்தனித்த விழிகளை சிரமப்பட்டு தாழ்த்தியவாறு உள்ளே சென்று அமர்ந்தாள்.

காலின் கீழ் புசுபுசுவென எதோ உரச, திடீரென ஏற்பட்ட கூச்சத்தால், துள்ளிக் குதித்தாள் உமா. “இதுதான் என் செல்லகுட்டி ஜிராபி உன்ன வரவேற்க இப்ப இவன் ஒருத்தன் தான் இருக்கான்” என்றபடி அவனை/அதைத் தூக்கிக் கொஞ்சியபடி “யாரு புதுசான்னு பாக்கறியா. இவதான் என் தோழி உமா” என்று ஆர்வமாக அறிமுகப் படலம் நடத்தி முடித்தாள் அஞ்சலி.

நாய்குட்டிக்கு ஜிராபி என்று பெயர் வைத்த ரசனையை (!!??) வியந்துகொண்டே வீட்டைப் பார்த்த உமாவுக்கு பிரமிப்பாக இருந்தது. அழகான பெரிய வீடு, அப்போதுதான் துடைத்துவிட்டதைப் போன்று சுத்தமாக இருந்தது. நிறைய ஆடம்பரப் பொருட்கள் ஏதும் இல்லாவிடினும் எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்கு இருந்தது. வீட்டின் பராமரிப்பு அதன் சுத்தமான திரைச்சீலைகளில் தெரிந்தது. அத்துடன் தன் வீட்டை ஒப்பிட்டுப் பார்த்த உமாவுக்குத் தன் ஏழ்மை பெரிதாகத் தெரிந்தது.

உமாவுக்கு அஞ்சலியை சில வாரங்களாகத் தான் தெரியும். இருவருக்கும் கல்லூரி விடுமுறை. வெவ்வேறு கல்லூரியை சேர்ந்த இருவரும் ஒரு கோடைக்கால தையல் வகுப்பில் சந்தித்துக் கொண்டதும் நட்பு வேர்விடத் தொடங்கியது. அஞ்சலியில் அம்மா அப்பா இருவரும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதால், விடுமுறையைக் கழிக்கவென்று தன் வீட்டுக்கருகில் இருந்த தையல் வகுப்பில் சேர்ந்தாள். அஞ்சலி நல்ல கலகலப்பான பெண், எதையும் சட்டெனப் புரிந்துகொள்வாள் அன்பானவளும் கூட.

உமாவின் குடும்பம் சற்று பெரியது, உமா மூத்த பெண், அவளுக்கு ஒரு தங்கையும் தம்பியும் என மூன்று பேர். என்னதான் தாய் தந்தை சேர்ந்து உழைத்தாலும் மூவரும் படித்துக் கொண்டிருப்பதால் சிறிது சிரமமாகத் தான் செல்கிறது வாழ்க்கை. தையல்கலை கற்றுக் கொண்டால் தங்கள் படிப்பு செலவினங்களுக்கு உபயோகப்பட கூடும் என்று தான் அவள் அந்தத் தையல் வகுப்புக்கு செல்லத் தொடங்கியதே. இப்போதும் மாலை நேரம் பள்ளிச் சிறார்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து குடும்பத்துக்கு சிறிது உதவுகிறாள் தான்.

இயல்பிலேயே விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறமையுடைய உமாவுக்கு நேரத்தை வீணடிப்பதில் சற்றும் உடன்பாடு இருந்ததில்லை. ஒரு நாள் உமாவின் ஆடையில் இருந்த நேர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டைப் பார்த்து விட்டு தனக்கும் கற்றுத்தரக் கேட்டாள் அஞ்சலி. பலமுறை அழைத்தும் மறுத்து வந்தவள் இப்போதுதான் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

உமா பலமுறை மறுத்ததற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இப்போது இவள் அழைப்பை ஏற்றால் நாளை தானும் அஞ்சலியை அழைத்து உபசரிக்க நேரிடும். தன் ஏழ்மையை வெட்ட வெளிச்சமாக்க அவளுக்குப் பிரியமில்லை. இருந்தாலும் அஞ்சலியை புண்படுத்த விரும்பாமல் தாமரை இலை நீர் போலப் பழகினாள்.

துணிவகைகள், நூல், ஊசி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் எம்பிராய்டரி போடத் துவங்கினர். முதலில் கைக்குட்டையில் ஓரம் ஆரம்பித்து திறந்த மனதுடன் தையல் நுணுக்கங்களை சொல்லித் தர, அஞ்சலி ஆர்வமாகக் கற்றுக்கொண்டாள். அன்றைய பாடம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல தன்  உடமைகளை எடுத்து வைத்தாள் உமா.

அதற்குள் ஒரு பெரிய கண்ணாடித் தம்ளரில் மாதுளைச் சாறு எடுத்து வந்து அருந்தக் கொடுத்தாள். முதலில் மறுத்தாலும் பிறகு தட்டமுடியாமல் வாங்கிக் கொண்ட உமா தர்ம சங்கடமாக உணர்ந்தாள். கலகலப்பாகப் பேசி உமாவை இயல்பாக உணர வைத்தாள் அஞ்சலி. பேச்சினூடே சுவற்றில் மாட்டப் பட்டிருந்த அழகான கண்ணாடி ஓவியங்களைப் பார்த்தவள் அது அஞ்சலியின் கைவேலைப்பாடு என்றறிந்து பிரம்மித்துப் போனாள்.

“ரொம்ப நல்லாருக்கு, எப்படி வரைந்தாய், ரொம்ப நேரம் ஆகுமா” என்றெல்லாம் கேட்டு தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினாள். “ரொம்ப எளிது டீ, காலேஜுல interior decoration வகுப்புல சொல்லிக்குடுத்தாங்க. அழகான படத்தை கண்ணாடி மேல் வைத்து trace எடுத்து பொருத்தமான வண்ணங்கள் கொடுத்தா பாக்க நல்லா இருக்கும்” என்றாள்.

அஞ்சலி சொல்வது போல் அவ்வளவு எளிதல்ல என்பது அதன் நேர்த்தியில் தெரிந்தது. வெண்ணை உண்ணும் கண்ணன் உருவம் வெகு அழகாக இருந்தது. வெள்ளி மற்றும் தங்க வேலைப்பாடுகள் செய்து மேலும் அழகூட்டி இருந்தாள். இதற்கான கண்ணாடிகள், வண்ணங்கள், தூரிகைகள் வாங்க செலவு அதிகம் பிடிக்கும் என்று உணர்ந்தவள் ஆர்வத்தை மறைத்து புன்னகைத்தாள்.

அதற்கடுத்த நாட்களில் அவர்கள் தையல் வகுப்பை முடித்துவிட்டு அஞ்சலி வீட்டுக்குச் சென்று எம்பிராய்டரி கற்றுக் கொள்வது வழக்கமாயிற்று. ஊருக்குச் சென்றிருந்த அஞ்சலியின் பாட்டி வந்துவிட்டதால் இவர்களுக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு தேவையான சிற்றுண்டி தாராளமாகக் கிடைத்தது.

அன்று அஞ்சலியின் கணினியில் பஞ்சாபி எம்பிராய்டரி வகையான “புல்காரி” வேலைப்பாடுகளை தரவிறக்கி அதைப் பார்த்து பயிற்சி செய்தார்கள். உமாவுக்கு அவளுக்குப் பிடித்த கிளாஸ் பெயிண்டிங் கற்றுத்தரப்பட்டது. இருவரிடையே நட்பு கிளை விடத் தொடங்கியது.

அன்று தையல் வகுப்பின் கடைசி நாள், அடுத்த நாள் இருவருக்கும் கல்லூரி திறக்கவிருப்பதால் இருவரும் விடை பெறும் நேரம் நெருங்கியது. உமா ஒரு புதிய வெள்ளை துப்பட்டாவில் அழகான “பஞ்சாரா மிரர்” வகை வேலைப்பாடு செய்து வந்திருந்தாள் அஞ்சலிக்குப் பரிசளிக்க.

அவளுடைய கறார் எண்ணத்தின்படி இருவரும் அவரவர்க்குத் தெரிந்ததை பரிமாறிக் கொண்டனர். ஆனால் அஞ்சலி வீட்டில் உண்டதற்குப் பதிலாக இந்த பரிசென்று நினைத்தாள். அவளைப் பொறுத்தவரை பதிலுக்கு பதில் கொடுத்துவிட வேண்டும், கடனாளியாக இருக்கக் கூடாது என்ற நடுத்தர வர்க்கத்து எண்ணவோட்டம் தான்.

உள்ளறையிலிருந்து சில பொருட்களை எடுத்து வந்த அஞ்சலி “இது உனக்குத்தான்” என்று கூறிவிட்டு “வந்துட்டேன் பாட்டி” என்றபடி உள்ளே சென்றாள். என்னவென்று பார்த்த உமாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் வைத்திருந்த பொருட்களின் மேலாக இருந்த இருந்த இரண்டு சுரிதார் ஆடைகள் தான் அவளின் அதிர்ச்சிக்குக் காரணம்.

அவை ஏற்கனவே அஞ்சலி அணிந்திருந்தவை என்று அறிந்திருந்த உமாவுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. பழைய ஆடைகள் தந்து நட்பை ஏளனப் படுத்தி விட்டாளே என்ற வருத்தம் தொண்டையை அடைக்க இதற்கென்ன எதிர்வினையாற்றுவது என்று அறியாமல் சிலை போல் அமர்ந்திருந்தாள்.

உள்ளேயிருந்து சூடான கிச்சடியும், தேநீரும் எடுத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டே வந்த அஞ்சலியை ஏறிடப் பிடிக்காமல் மெளனமாக இருந்தாள். “எடுத்துப் பாக்கலையா” என்றவாறு “உனக்கு கிளாஸ் பெயிண்டிங் செய்ய எல்லாப் பொருட்களும் நானும் அம்மாவும் நேத்து சாயந்திரம் பூரா அலைந்து திரிந்து வாங்கினோம் தெரியுமா” என்று எடுத்துக் காட்டியவள் “ஹே, ப்ளீஸ் டீ, இந்த ரெண்டு சுடிதாரும் எனக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கு ஒண்ணுல மயில் டிசைனும், ஒண்ணுல காஷ்மீரி டிசைனும் பண்ணித் தரியா” என்றாள் கெஞ்சலாக.

“நீ டிசைன் செஞ்சு எடுத்துட்டு மறுபடி எங்க வீட்டுக்கு வரணும், நம்ம பிரெண்ட்ஷிப் இன்னியோட முடியக் கூடாது” என்று உமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தாள். இத்தனை நேரம் உமாவின் கண்களில் சிறைப்பட்டிருந்த கண்ணீர் கன்னங்களில் உருண்டு வழிந்தோடியது.

தன்னைப் புரிந்துகொண்டு எங்கே கிளாஸ் பெயிண்டிங் சாதனங்களை மறுத்துவிடுவேனோ என்று இந்த எம்பிரிராய்டரி கோரிக்கை வைத்திருக்கிறாள் என்று உணர்ந்தாள். தோழியைத் தவறாக எண்ணி விட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டு அஞ்சலியைக் கட்டியணைத்துக் கொண்டாள். அங்கே உண்மை நட்பு பூத்துக்குலுங்கியது.

பின்குறிப்பு:

குக்கூ படத்தில் வந்த  ஒரு காட்சி  தான் இந்தக் கதைக்குக் காரணம் 🙂

Advertisements

13 thoughts on “சினேகிதி

  1. கடந்த சில நாட்களாக எழுதுதிவரும் கதைகளில் Finishing touch ரெம்பவும் நன்றாக இருந்தது அனால் இதில் கொஞ்சம் குறைவாக இருப்பதுபோல் ஒரு உணர்வு.மற்றபடி நட்பு அழகாக பூத்து இருக்கிறது உங்கள் கதையில்.அருமை

  2. சில சமயம் சந்தேகம் வரத்தான் செய்யும் வரலனா அதுல நட்பு இருக்காது நடிப்புதான் இருக்கும் #அனுபவம் தான் ! நட்பூ நல்லது 🙂

  3. நல்ல ஒரு வெல்வெட் மெத்தையில ஒரு பக்கம் உருண்டுகொண்டே வந்து கடைசியில் சுகமாய் எழுந்ததுபோல் இருக்கிறது உங்கள் கதை. ஒரு நடுத்தரவர்க்க பெண்ணின் மனவோட்டத்தை மிக இயல்பா விவரித்துள்ளீர்கள். வாழ்த்துகள். I really enjoyed it 🙂

  4. உணர்தலில் பிழை. ஆனா நட்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

    நட்புன்னா சந்தேகப்படவே கூடாதே, சந்தேகப்பட்டுட்டா என்ன நட்பு?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s