தைப் பொங்கலும் வந்தது..

ammavin kolam
அம்மாவின் கோலம்.

சின்ன வயதில் வந்த தைப் பொங்கலுக்கும் இப்போதைய தைப் பொங்கலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உணர முடிகிறது. எல்லாருக்குமே அப்படித் தோன்றுகிறதா இல்லை எனக்கு மட்டுமேயா என்று தெரியவில்லை. என் நினைவடுக்குகளில் உள்ள தைப் பொங்கல் பற்றி யோசிக்கிறேன்.

தீபாவளி அளவுக்கு பெரிய கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சற்றும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாதது பொங்கல். பெரிதாக புத்தாடைகள் அணிந்து கொண்டாடியதாக நினைவில்லை. பள்ளிக்கு சீருடை என்பதோடு தீபாவளித் துணியின் புதுக்கறுக்கே குறைந்திருக்காது என்பதால் தேவையும் இருந்திருக்கவில்லை. அப்போதைய காலத்தில் தேவை என்பது மிகக் குறைவே என்பது இப்போது நினைத்தால் ஆச்சரியமளிக்கிறது.

பொங்கலுக்கு ஓரிரு வாரங்கள் முன்னரே வீட்டை ஆக்கிரமிக்கும் கரும்புகளின் வாசமும், அவற்றை மொய்க்கும் கருப்பு எறும்புகளின் வாசமும் ரம்மியம். தேன்பாவு என்று ஆலைகளில் இருந்து மாமனோ, யாரோ கொண்டு வரும் சக்கரைப் பாகு தான் தோசைக்குத் தொட்டுக் கொள்ள அடுத்த ஒரு மாதத்துக்கும்.

ம்மா மார்கழி முதலே துணைக்கு சிலரை வைத்துக் கொண்டு வீட்டுக்கு வெள்ளையடிப்பது, சாணி மெழுகுவது கோலமிடுவது என்று தன் வேலைகளில் முனைப்பாகி விடுவார். என்ன வேலை இருந்தாலும் எங்களை எழுப்பி பிள்ளையார் கோவிலுக்கு குடத்துடன் அழைத்து சென்று விநாயகரைக் குளிப்பாட்டி திருநீர் குங்குமம் அணிவித்து பூ வைத்துவிட்டு வருவது வழக்கம், மார்கழி முழுக்க.

மார்கழிப் பனிக்குளிர், பெருமாள் கோவில் பஜனை மணியோசை, குளிருக்கு இதமாக கை பொறுக்கா சூட்டுடன் கிடைக்கும் கோவில் பிரசாதம், அக்கம் பக்கம் வீடுகளை மிஞ்சும் வண்ணம் போட்டி போட்டு போடும் வண்ணக் கோலம் என மார்கழியே தையை வரவேற்கும்.

ரு வாரம் முன்னரே தாரை தப்பட்டைகளோடு அமர்க்களமாக சளுகருது (ஜல்லிக் கட்டு) ஆரம்பித்து விடும். ஊர்த் திடலில் மக்கள் திரண்டிருப்பர், நீண்ட குச்சியை வைத்துக் கொண்டு சின்ன காளை மாட்டை மிரட்டிக் கொண்டிருப்பர். நானும் அக்காவும் சென்று பார்த்து விட்டு இது டூப்ளிகேட் ஜல்லிக் கட்டு என்று வந்து விட்டோம். அதன் பிறகு அதெல்லாம் வேடிக்கை பார்க்க செல்வதில்லை. நாங்கள் அங்கு செல்வதை எங்கள் தம்பி விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம். ஆண்கள் கூடும் இடங்களுக்கு நாங்கள் செல்வது அவனுக்குப் பிடிக்காது. அவன் எங்களை விட சிறுவன் என்றாலும் அவன் சொன்னால் கேட்டுக் கொள்வது இப்போதும் வழக்கம்.

பொங்கல் வந்தாலே மிக முக்கியம் பொங்கல் வாழ்த்து அல்லவா, அது ஒரு அழகிய பொற்காலம். தோழிகள் அனைவரும் வித விதமான பொங்கல் அட்டைகளை வாங்கி அனைவருக்கும் பொருத்தமான பட்டப் பெயர்கள் சூட்டியும், கவிதைகள் எழுதியும் பெயர் எழுதாமல் அவர்கள் பையில் வைத்து விடுவோம். அதை எழுதியது யார் என்று கண்டு பிடிக்க வேண்டும. சக்கரைப் பொங்கல் போலவே தித்திப்பானது இந்த விளையாட்டு.

பெரும்பாலும் அழகிய கடவுளர் படங்களோடு வரும் இவ்வாழ்த்தட்டைகள் அப்போதைய சினிமா நடிகைகள், நடிகர்கள் படம் தாங்கியும் வருவதுண்டு. நான் எப்போதும் என் தம்பிக்கு ரஜினி படங்களைத் தான் வாங்கி அளிப்பேன். கடைசியாக தம்பிக்கு வாங்கித் தந்த வாழ்த்தட்டையில் படையப்பா படத்தில் வரும் அத்தனை ரஜினி ஸ்டில்களும் இருக்கும். அட்டையை திறக்கும் போது எல்லா ரஜினிகளும் ஒன்றன் மேல் ஒன்றாக விரியும். அவற்றையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிருக்கிறான் இன்னும் 🙂 . சூர்யவம்சம் தேவயானி, ஹரிச்சந்திரா மீனா, ஒன்ஸ்மோர் சிம்ரன் படங்களும் உண்டு வீட்டில், அக்காவுக்குப் பிடித்தவர்கள்.

மார்கழி கடைசி நாள் வீடு அம்மாவின் கைவண்ணத்தில் புதிது போல மின்னும். அன்று சிறப்பான கோலங்கள் இடப்படும். வண்ணங்களைக் காயவைத்து சாணிக்கு சொல்லி விட்டபடி அதிக சுறுசுறுப்புடன் எப்போதும் போல் அம்மா. அப்பாவும் நாங்களும் திங்க ஏதாவது கிடைக்குமா என்று சமையலறையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்போம். சரியாக ஐந்தரை மணிக்கு எல்லா வேலைகளும் முடிந்து அம்மா கோலங்கள் போட்டு, யாரையாவது ஏவி வீட்டை சுற்றிலும் காப்புக் கட்டி முடிந்து சங்கராந்திக்கு சோறு படைத்துவிட்டிருப்பார்.

விடிந்தால் எல்லாரையும் விரட்டிக் குளித்து வரச் செய்து பெரிய கட்டைப்பைகளில் பொங்கல் செய்யத் தேவையான சாமான்களை அம்மாவும் அக்காவும் அடுக்குவர். புடவைகள் எடுத்து வைத்து சாமிக்கு வைத்து பிறகு அத்தைகளுக்குத் தருவார். எத்தனை கஷ்டத்திலும், சண்டைகளிலும் அம்மா இந்த வழக்கத்தை மறக்கவில்லை. இந்த வருடம் முதல், புடவைகள் எனக்கும் அக்காவுக்குமாம் :D. நானும் அப்பாவும் கோவிலுக்கு செல்லும் வழியில் தின்ன தீனியும், படிக்க புத்தகங்களும் எடுத்து வைக்க உதவி செய்வோமாக்கும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கலிட்டு சாமி கும்பிட்டு, சாப்பிட்டு விட்டு திரும்பி வர இரவாகி விடும். தொலைகாட்சி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை நாங்கள் பார்த்ததே இல்லை 😦 .

டுத்த நாள் வீட்டில் ஓய்வெடுத்துக் கிடப்போம். அத்தை, சித்தி மகள்கள்/மகன்கள் வந்தால் ஒரே கொண்டாட்டம் தான். மஞ்சள் நீர் விளையாடுகிறோம் என்று தொட்டி நீரில் மஞ்சளைக் கொட்டி ஒரே கலாட்டாவாக இருக்கும். சாமி மெரவனைகள் (உற்சவம்) வரும் போது வீட்டுக்குள்ளே நின்று எட்டிப் பார்ப்பதோடு சரி (பிறந்தவன் கட்டளை 🙂 ). ஊரே மஞ்சள் நீராட்டம் தான். சத்தமில்லாமல் பேசுபவர்கள் கூட சாமி ஊர்வலத்தில் தெருவில் ஆடிக் கொண்டு செல்வது வேடிக்கையாக இருக்கும் பாதிக்கு மேல் போதையோடு திரிவார்கள். பிறகு மாடு பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் வரும், வீட்டுக்குள் அழைத்து சென்று பழம் கொடுத்து மாட்டுக்கு ஒரு பூஜை செய்து காணிக்கை போட்டு அனுப்பி வைப்பார் அம்மா.

ன்று நான் ஓரிடத்தில், அக்கா ஓரிடத்தில், தம்பி ஓரிடத்தில். அம்மா, அப்பா மட்டும் தனியே பொங்கல் சம்பிரதாயங்களை செய்து கொண்டு.

ன் வளர்ந்தோம் என்று வெறுமையாக இருக்கிறது, இந்த மாதிரி நேரங்களில். அனைவரும் வேறு வேறு இடங்களில் இருப்பது கை கால்களை அறுத்து தனித்தனியே போட்ட மாதிரி இருக்கிறது. ஒரு தொட்டி மீன்களை பிரித்து எடுத்து வேறு வேறு தொட்டிகளில் எடுத்துப் போட்டுக் காலம் சிரிக்கிறது. கடினமாகத் தான் இருக்கிறது, இன்னும் கொஞ்ச காலம் ஆகும் இயல்பாக சுவாசிக்க. இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது இப்படி முடிப்பேன் என்று நானே அறிந்திருக்கவில்லை.

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்..

அன்புடன்

ரேணுகா.

Advertisements

7 thoughts on “தைப் பொங்கலும் வந்தது..

  1. இந்த பதிவு எப்போ வந்தது நான் கவனிக்கவே இல்ல?

  2. என் மனம் கனத்துப்போய்விட்டது. பொன்னான வாழ்க்கை முறை தொலைந்து போய்விட்டது. நாம் அனுபவித்ததை நம் சந்ததியர் அனுபவிக்க போவதில்லை. இருப்பதை வைத்துக்கொண்டு மனநிம்மதியுடன் அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை இனி எங்கே காணப்போகிறோம். கூட்டு குடும்பம் ஒழிந்தது. பிழைப்புக்காக வெகு தூரம் சென்று வாழ வேண்டியாச்சு. இந்த டிவி வேற மக்களை மிகவும் அன்னியபடுத்தி விட்டது.

    படிக்கும்போதே, நான் என் பால்ய நினைவுகளில் மூழ்கி விட்டேன். அற்புதமா தொகுத்து சொல்லியுள்ளீர்கள். ஆண் பிள்ளையானாலும் சாண் பிள்ளை என்று சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் சகோதரிகளை…. அன்று செய்த அட்டகாசங்களை இன்று நினைத்து பார்த்தால் வெக்கமா இருக்கிறது . ஆனாலும் பாசம் போகவில்லை. கிராமத்துக்கே கூட்டிட்டு போய்ட்டீங்க. இனிய நினைவுகள் தான் நமக்கு என்றென்றும் நீங்காத சொத்து.
    பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கு அங்கள் அன்பு கணவருக்கும் நன்றி ரேணு 🙂

  3. கலக்கல் பதிவு தங்கச்சி ரசித்தேன் எங்களூரில் தைப்பொங்கல் தான் தீபாவளியை விட விசேஷமானது.

  4. கலக்கல் பதிவு தங்கச்சி எங்களூரில் தைப்பொங்கல் தான் தீபாவளியை விட விசேஷம். அருமையான பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s