அபிராமி அந்தாதி #15

shiva_parvati

பாடல் -51

மோகம் நீங்க

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

பொருள்:

திரிபுரத்தை நிலையென்று எண்ணி அசுரர்கள் செய்த தீவினைகள் அற்றுப் போகுமாறு செய்த சிவபிரானும், திருமாலும் வணங்கக் கூடிய நாயகியே, உன்னை வணங்குகின்ற அடியவர்களின் பிறப்பறுத்து முக்தி தருவாய் நீயே!

#140விளக்கம் #அபிராமிஅந்தாதி51

திரிபுரம் அழித்த சிவனும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியை நாம் வணங்கினால் முக்தி தருவாள்!

பாடல் – 52

பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

பொருள்:

பிறை சந்திரனை சிரசில் சூடிய பெருமானின் அழகிய தேவியே, தேர், குதிரை,மதம் பிடித்த யானை,அழகிய பொற்பல்லக்கு,  குறுநில மன்னர்கள் கப்பமாகத் தரும் தங்கம், விலை மிகுந்த பொன்னாரம் ஆகிய திருச் சின்னங்கள் நின் திருவடித் தாமரையை வணங்கி அன்புடன் தவம் செய்யும் ஞானிகள் பெரும் பேறாகும்.

#140விளக்கம் #அபிராமிஅந்தாதி52

பிறைசூடன்தன் தேவியே, தேர், குதிரை, மதயானை, பல்லக்கு, கொட்டும் பொன், பொன்னாரம் ஆகியவை உன்னை வணங்குபவர் பெரும் பேறுகள் ஆகும்.

பாடல் – 53

பொய்யுணர்வு நீங்க

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

பொருள்:

சின்னஞ்சிறு இடையில் சாற்றிய சிவந்த பட்டும், முத்தாரங்கள் அணிந்த பெரிய மார்பகங்களையும், கன்னகரிய கூந்தலில் வண்டுகள் மொய்க்கும் பிச்சிப் பூக்களையும் சூடிய நின் மூன்று திருவிழிகளையும் கருத்தில் வைத்து தியானிப்பவர்களுக்கு இதைவிடப் பெரிய தவம் வேறில்லை.

#140விளக்கம் #அபிராமிஅந்தாதி53

அபிராமியின் சிற்றிடையின் சிவந்த பட்டும், முத்தாரம் அணிந்த மார்பும், வண்டு மொய்க்கும் பிச்சி சூடிய கூந்தலும், மூன்று கண்களும் தியானிப்பவர்களுக்கு அருந்தவம்.

பாடல் – 54

கடன் தீர

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

பொருள்:

எதிர் காலத்தில் தன் ஏழ்மை காரணமாக செல்வரிடம் சென்று யாசித்து அவர்களின் இழி சொல் பெற வேண்டாம் என்று நினைத்தீர்களானால் தவம் இயற்றக் கல்லாத கயவரிடம் ஒரு போதும் செல்லாத நல்ல நிலைமையை இப்போது அளித்த திரிபுர நாயகியின் பாதங்களை நன்றியுடன் பற்றிக் கொள்ளுங்கள்.

#140விளக்கம் #அபிராமிஅந்தாதி54

தவம் கல்லாத கயவருக்குக் கீழ்படியாத நிலை தந்த திரிபுர நாயகியின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் எப்போதும் நிலை தாழாமல் வாழலாம்.

பாடல் – 55

மோனநிலை எய்த

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

பொருள்:

ஆயிரம் மின்னல்கள் சேர்ந்து ஒரு வடிவாகி அன்னையாகத் திகழ்கிறது. அரிய வேதத்தின் முதலும், உட்பொருளும், முடிவுமாய் விளங்கும் முதல்வியே, உன்னை நினைத்தாலும், நினைக்காமல் மறந்தாலும் உனக்கொன்றும் இல்லை. எப்போதும் அகமகிழ்ந்திருக்கும் ஆனந்தவல்லி நீ அபிராமி!

#140விளக்கம் #அபிராமிஅந்தாதி55

ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தவளே, வேதத்தின் முதலும் முடிவுமானவளே, யாம் உன்னை நினைத்தாலும் மறந்தாலும் என்றும் ஆனந்தவல்லியாகத் திகழ்பவளே!

அன்புடன்

ரேணுகா

Advertisements

3 thoughts on “அபிராமி அந்தாதி #15

  1. ரெம்ப வருஷம் கழிச்சு இந்த பக்கம் எட்டி பாக்குறீங்க போல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s