காலப்பெயர்வு

The-time-machine-or-teleport-portal

இந்த உணவு விடுதியில் தான் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும் என்று யோசித்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது மணி இரண்டைத் தொட்டது.

டோக்கன் நம்பர் 975K என்றது, அப்பாடா என்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். இன்று விரைவில் உணவு கிடைக்கும் என்று ஒரு ஆசுவாசம் கிடைத்தது. அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் தானியங்கிக் கைகள் லொட்டு லொட்டென்று ஒரு லட்சம் தட்டுக்களை எங்கள் சாப்பாட்டு மேசைகளில் வரிசையாக அடுக்கியது.

தலைக்கு மேலிருந்து சிறு குழாய்கள் போன்ற அமைப்புகள் நீண்டு முதலில் சூடான நீராவி வெளி வந்தது. பிறகு தட்டுகளில் காய்கறிகள் கலந்த கூழை நிரப்பியது.

திரவமும் அல்லாத திடத்தன்மையும் அல்லாத கூழ் நல்ல வாசனையாக இருக்கவே திருப்தியாக சாப்பிட்டு முடித்தேன். கைககளை டிஷ்யூவில் துடைத்துக் கொண்டு வெளியே செல்லும் வாக்கலேட்டரில் நின்றேன். அது மெதுவாக ஒரு இரையுண்ட சர்ப்பம் போல் நகர ஆரம்பித்த போது தான் அந்த பச்சைக் கண்ணாடி அணிந்த கொஞ்சம் சைண்டிஸ்ட் தோரணையில் இருந்த அந்த குண்டன் என்னைப் பார்த்து அழைத்தான்.

அவன் அங்கே வேலை செய்பவனாகத் தெரியவில்லை, அடையாள அட்டையைப் பார்த்தால் அரசாங்க உத்தியோகனாகத் தெரிந்தான். அவனிடம் சென்றால் எளிதாக க்யூ வரிசையைக் கடந்து வெளியே சென்றுவிடலாம். ஆபீசர் அழைக்கிறார் என்று கூறி பலரின் மூச்சுக்களைக் கடந்து அவரை சமீபித்தேன்.

என் கையில் ஒரு டம்பளர் நிறைய பால் போன்ற திரவத்தைக் கொடுத்து இன்னொரு பச்சைக் கண்ணாடி அணிந்தவனிடம் கொண்டு போய் தரச்சொன்னான். அவன் இருக்குமிடம் செல்ல குறைந்தது ஆயிரம் ஆட்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். டம்ப்ளரை மூடியாவது தந்திருக்கலாம் அந்த குண்டன். பால் சிந்தாமல் இருக்கட்டும் என்று இரண்டு மிடர் அருந்தினேன். அத்தனை ருசியாக இருந்தது.

கண்டிப்பாக நான் இதைக் குடித்ததை காமிராவில் பார்த்துக் கொண்டிருப்பான். “பார்க்கட்டும் போ” என்று அலட்சியமாக எண்ணியபடி இன்னொரு மிடறு விழுங்கினேன். சற்று தொலைவு நடந்ததும் கூட்டம் கொஞ்சம் குறைவாகத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும், இரண்டாவது பச்சைக் கண்ணாடிக்காரனைத் தேடினேன்.

அந்த இடத்தில் கரகாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆம்! அது கரகாட்டம் தான், தொலைக்காட்சியில் “மூன்னூறு ஆண்டு பழமைகள்” நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். கரகாட்ட நிகழ்ச்சி மேடையின் அருகில் ஒரு கோவில் போல் தெரிந்தது. கோவில்களை விடுதிகளாக மாற்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றனவே என்று என் பள்ளிப் பாடநூல் கேள்வி பதிலை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தேன்.

அங்கிருந்த ஆண்கள் அனைவரும் நான்கு பேர் அணியக் கூடிய துணியில் பெரிய கால் அங்கிகளையும், வெள்ளை நிற வேட்டிகளையும் அணிந்திருந்தனர், பெண்கள் இப்படியும் ஆடை அணிவார்களா என்று தோன்றும் அளவுக்கு முழுக்க பல வண்ண பட்டாடைகள் சூடி வாச மலர் கூந்தலில் தரித்து தங்க நகைகள் அணிந்து பாந்தமாய் வலம் வந்தனர்.

கோவிலின் வாசல் அருகே, அண்டாக்களில் நீர் மோர், கூழ் கருத்து அள்ளி அள்ளி டம்ப்ளர்களில் தந்து கொண்டிருந்தனர். அந்தப் பால் இருந்த டம்ப்ளரைப் பார்த்தேன். பால் நிறம் மாறி தண்ணீர் போல் இருந்தது. குழப்பத்தில் ஆழ்ந்தாலும் இந்த இடம்தான் வாழத் தகுந்த இடமாக தோன்றியது. கையில் இருந்த டம்ப்ளரை வீசி எறிந்துவிட்டு நீர்மோர் வாங்கி ஆவலுடன் பருகினேன்.

அதே நேரத்தில் பச்சை நிறக் கண்ணாடி அணிந்த ஆயிரம் பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து தங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

மக்கள் தொகையை வன்முறையில்லாமல் கட்டுப்படுத்தும் அந்த ஆராய்ச்சியின் பெயர் “ஆபரேஷன் காலப்பெயர்வு”.

 

அன்புடன்,

ரேணுகா

 

Advertisements

3 thoughts on “காலப்பெயர்வு

  1. “அது மெதுவாக ஒரு இரையுண்ட சர்ப்பம் போல் நகர ஆரம்பித்த போது” நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்.

  2. கதை நன்றாக போய் முடிகிறது. சுருக்கமாகவும் இருக்கிறது. உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான திங்கிங் .
    அருமை. வாழ்த்துக்கள். நன்றி :))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s