வேலைக்கு செல்லும் பெண்கள்

womenattheworkplace

 

பெண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் ?

இது ஒரு அபத்தமான கேள்வி (ஆண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் என்று நாங்கள் கேட்பதில்லை).

ஆனாலும் இதற்கான பதில்கள் சுவாரஸ்யமானவை

  • குடும்ப பாரம் பகிர்ந்து கொள்ள
  • அத்தியாவசியத் தேவைகளுக்கு
  • ஆடம்பர செலவுகளுக்கு
  • வீட்டில் போரடிப்பதால்
  • படித்த படிப்பு வீணாகாமல் இருக்க
  • மாமியார் தொல்லையில் இருந்து தப்பிக்க
  • தனக்கென ஒரு அடையாளம் தேவை என
  • சுயத்தை நிலைநாட்ட
  • பணம் ஈட்ட

பெண்கள் வேலைக்கு செல்வதற்கு நேரும் இடையூறுகள்

இப்போதெல்லாம் முன்னை விட பெண்கள் நிறைய படிக்கின்றனர். படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து, இருபத்தி மூன்று, இருபத்தி நாலு வயதில் திருமணம் பேசி முடித்தால், மூட்டை முடிச்சோடு வேலையையும் விட்டு விட்டு புருஷன் வீட்டுக்குப் போக வேண்டியது தான்.

அப்பறம் அதுவரை அம்மா வீட்டிலோ, விடுதியிலோ செய்து போடுவதைத் தின்றுவிட்டு வேலைக்குப் போய் வந்த காலம் போய் மாங்கு மாங்கென்று செக்கு மாடு போல சமையல், மற்றும் இதர வீட்டு வேளைகளில் மூழ்கி தெளிந்து, வீட்டுக்கருகிலேயே வேலை தேட வேண்டும்.

வீட்டு வேலை கடினமா, என்பவர்கள் ஒரு சின்ன சோதனை செய்து பார்க்கலாம். மனைவி வீட்டில் இருக்கையில் வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் போட்டோ எடுத்துக் கொள்ளவும், பிறகு அவர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு ஒரு நாள், வாரம், மாதம் கழித்து அதே போல போட்டோ எடுக்கவும். எல்லாப் போட்டாக்களையும் ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ளவும்.

ஓரளவு வீடும் வேலையும் செட்டான பிறகு குழந்தை உண்டாவது அடுத்த பிரச்சனை. வேலைக்கெல்லாம் போக வேண்டாம், “ரெஸ்ட் எடு” ” வேலையா முக்கியம்” என்பதையெல்லாம் கடந்தால், வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டுக்கு செல்லவேண்டிய கட்டாயம்/நிர்பந்தம்/ஆசை. பேறு கால விடுப்பெல்லாம் முடிந்து வேலையத் தொடர முடியாத நிலையில் வேலையை விடுபவர்கள் பலர். பிறகு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி, அடுத்த குழந்தை ஏற்பட்டால் இன்னொரு சைக்கிள்.

எல்லாம் முடித்து சரி வேலைக்குப் போகலாம் என்று பெண் முடிவெடுக்கும் போது அவுட் டேட் ஆகியிருப்பாள். நேர்முகத்தேர்வகளில் தன்னை விட சின்ன வயதுப் பெண்கள்/ஆண்களோடு போட்டி போட்டு வெல்வது கொஞ்சம் கடினமே. சில நாள் முயற்சி செய்துவிட்டு வீடே கதி என்று கிடப்பவர் பலர்.

யார் தொடர்ந்து வேலைக்கு செல்கின்றனர்?

எத்தனை இடையூறுகள் இருந்தாலும், சில பெண்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லக் காரணம் குடும்பத்தார் மற்றும் கணவனின் ஒத்துழைப்பு. இன்னொரு காரணம் அவர்களின் சம்பாத்தியம் குடும்பத்துக்குத் தேவைப் படுவது.

இன்னொரு சுவாரஸ்ய விஷயம், பெரும்பாலும் பேங்க், கல்லூரி பேராசியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எப்பேர்ப்பட்ட இடையூறு நேர்ந்தாலும் வேலையை விடுவதில்லை. அவர்களுக்கு உதவ அவர்கள் குடும்பமே (மாமியார் குடும்பமுட்பட) காத்திருக்கிறது.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா?

“வேலைக்குப் போயி சம்பாதிக்கரான்னு கொழுப்பு”

“வேலைக்குப் போறேன்ன்னுட்டு ஊர் சுத்திட்டுத் திரியறா”

“வேலைக்குப் போறேன் பேர்வழின்னு வீட்டு வேலை ஒன்னு செய்யறதில்லை”

“நீ ஒருத்தி தான் வேலைக்குப் போறமாதிரி ஓவரா சீன் போடாத”

இவையெல்லாம் தவிர பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள்.

வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று பெண் நினைக்க ஆரம்பிக்கையில் அவளால் மீளவே முடியாத கடமைகளில் இறுக்கிக் கடப்பட்டிருப்பாள்.

உரிய அங்கீகாரம் மிகச் சிலருக்குக் கிடைப்பதை மறுக்கவில்லை. அவர்கள் பெரியபதவியில், பெரும் பணம் சம்பாதிப்பவர்களாக அல்லது புகழ் பெரும் துறையிலோ இருப்பது தற்செயலாக இருக்கலாம்.

வீட்டுக்கருகில் அலுவலகம், நல்ல மேலதிகாரி, பண்புள்ள சக பணியாளர்கள் இவையும் பெண்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லக் காரங்கள்.

பெண்களின் முழுமையான திறமை வெளிப்படுகிறதா?

எனக்குத் தெரிந்து முதல் தலைமுறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் பலபேர் மிகுந்த பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொள்கின்றனர். அவர்கள் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர்கள். மேலும் லஞ்சம், ஊழல் போன்றவற்றில் கடைசி இடத்தில் தான் இருக்கிறார்கள். சட்டம் மற்றும் கடமையை மதிப்பவர்கள் பெண்கள், அதனாலேயே அவர்கள் மேலதிகாரிகளாக இருந்தாலும் இகழப்படுவதைக் கண்டிருக்கிறேன்.

சில நேரங்களில் தங்களுக்குக் கீழ் இருப்பவர்களை சாதரணமாக கேள்வி கேட்டாலும் திமிர் பிடித்தவர்கள் என்று கருதப் படுவார்கள், அதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

மற்றபடி பொங்கல், கார்த்திகை தீபம் என்று கோலம் போடுவது, வெள்ளிக் கிழமைகளில் பட்டுப் புடவைகள், நகைகள் அணிந்து வருவது, மற்ற பெண்களிடம் புரணி பேசுவது “அவ என்ன செஞ்சா தெரியுமா” என்று கிசுகிசுப்பது என்று பக்கா பெண்களாக நடந்துகொள்வார்கள் (சிலர்).

தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் போது, பெண்களுக்கு உரிமை உணர்ச்சி அதிகம் வந்துவிடுகிறது. தங்கள் வீடு போலவே நடந்துகொள்வர். மேஜையில் கடவுள் படங்கள், காப்பிக் கோப்பைகள், அலங்காரப் பொருட்கள் என வைத்து அழகு பார்ப்பர். பெரும்பாலும் ஆண்கள் அப்படி நடப்பதில்லை, “இந்த மடம் இல்லைன்னா சந்தை மடம்” என்ற போக்காக இருக்கலாம்.

தொடர்ந்து வேலைக்கு செல்வதே பெரும்பாடாக இருக்கையில், பெரிய உயரங்களை எட்டுவது, சம்பள உயர்வு இதிலெல்லாம் நிறைய பேர் ஆர்வம் காட்டுவதில்லை. “கேட்கும் போதெல்லாம் லீவ் குடுக்கறாங்க” என்று சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் வேலைக்கு செல்பவர்களும் உண்டு.

தொழில் திறமையில் ஆண்களுக்கு இணையா பெண்கள் ?

என் வரையில் ஆண்கள் பெரும்பாலான பணிகளில் பெண்களை விட திறமைசாலிகளாக இருக்கின்றனர். ஒருவேளை அடுத்த தலைமுறையில் பெண்கள் முன்னேறலாம்.

பொறுமையாக பதில் சொல்வது, நிதானமாக ஒரு பிரச்சனையைக் கையாள்வது, தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது, பிரச்சனைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது, செய்யும் தொழிலில் அளவு கடந்த ஈடுபாடு இவற்றில் ஆண்களே முன்னிலை பெறுகின்றனர். ஆகவே அவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுதல் எளிதாகிறது.

இந்த சமூகம் எல்லா வகைகளிலும் ஆண்களை அரவணைத்து செல்வதே இதற்கு வேர். ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் தான், ஆண்கள் எத்தனை சொகுசாக வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். ஆண்களின் மேல் சுமத்தப்படும் பொறுப்புகள் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.

முடிவுரை : பெண்கள் வேலைக்கு செல்லலாமா?

இப்போதெல்லாம் வேலைக்கு செல்லும் பெண் தான் வேண்டும் என்று ஆண்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

மிகப் பிற்போக்குத்தனமானது என்று நினைத்தாலும், வீட்டையும் கவனித்து, குழந்தைகளைப் பேணி வேலைக்கும் சென்று இரட்டை சவாரி செய்வதைவிட  பேசாமல் பெண்கள் வீட்டை கவனித்துக் கொண்டிருப்பது மேல் என்று தோன்றுகிறது.

ஆனால் இப்போது ஆண்கள் முன்னைப் போல் இல்லை, பெண்களை சமமாக நடத்த ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களால் எல்லா வேலைகளையும் ஈகோ இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் மீது தான் சுமத்தப் படும். சேத்தன் பகத்தின் “ஒன் இந்தியன் கேர்ள் ராதிகா” சொல்வது போல் இது ஆண்களால் வடிவமைக்கப் பட்ட சமூகம், அவர்களுக்கு சாதகமாகவே செயல்படும். அலுவலக வேலை நேரங்கள் 9 முதல் 5 என்று இல்லாமல் முடிந்த போது வேலை நேரம் அமைக்க வேண்டும். இதற்கெல்லாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும். அதற்குள் பெண்கள் எல்லாவற்றையும் சமாளித்து தொழிலிலும் ஜொலிக்கும் தகவமைவு பெற்றுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். 🙂

அன்புடன்

ரேணுகா

 

 

Advertisements

6 thoughts on “வேலைக்கு செல்லும் பெண்கள்

  1. Slap on face:
    ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் தான், ஆண்கள் எத்தனை சொகுசாக வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.
    இது ஆண்களால் வடிவமைக்கப் பட்ட சமூகம், அவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்.

    Awesome article.. Your wordings and thoughts are improving day by day like a naturally growing tree.. Best wishes!
    It would take some time or even a generation to modify the stupidity embedded in the genes.
    Hope you will balance your business work well along with your happy family life..

  2. > பெண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் ?
    > இது ஒரு அபத்தமான கேள்வி (ஆண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் என்று நாங்கள் கேட்பதில்லை).

    வேலைக்குப் போகாத, அல்லது தன்னை விட குறைந்த சம்பளம் வாங்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்ள எத்தனை பெண்கள் சம்மதிக்கிறார்கள் / விரும்புகிறார்கள் ? வெளிநாடுகளில் இதெல்லாம் சாதாரணம். ஆனால் நம்மூரில் உயரம், ஊதியம், செல்வம் எல்லாவற்றிலும் தன்னை விட பெரிய ஆண் வேண்டும், ஆனால் தனக்குச் சமமாக மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் அபத்தம்.

    எல்லா ஆண்களுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை எல்லாம் இல்லை. குடும்ப பாரத்தைச் சுமக்க வேறு வழியில்லாமல், பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொண்டு, மேலாளரின் முட்டாள்தனங்களைப் பொறுத்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு ஆணும் வேலைக்குச் செல்கிறான். வேலைக்குப் போகாமல் பெண் வீட்டில் இருந்தால் யாரும் ஏதும் சொல்லப்போவதில்லை. ஆனால் ஆண் வேலைக்குப் போகாமல் இருந்தால் விட்டு விடுவார்களா 😉

    பிகு: உங்களின் முதல் கேள்வி மட்டுமே கொஞ்சம் கோபமூட்டியது. ஆனால் பதிவின் பிற்பகுதி மிகவும் தெளிவாகவும், மிக மிக ஏற்றுக் கொள்ளும்படியும் இருந்தது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

  3. நன்றி அருமையா கூடுமானவரை அலசி கொடுத்திருக்கீங்க.
    சொல்லப்போனால் பெண்கள் நிலை அனுதாபத்துக்குரியதுதான். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் தான். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். வாழ்கையின் பின் பகுதியில் இரட்டை சவ்வாரியை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறோம், எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று. ஆக இரட்டைசவ்வாரியில் கிடைப்பது தற்காலிக மகிழ்ச்சியே என்பது தெரியவரும். தன் கணவன், தன் குழந்தைகள் தன் வீடு தன் குடும்பம் என்பதே கடைசி வரை நிலைத்திருக்கும் இன்பம். வேலைக்கு போகவேண்டுமென்றால், குழந்தை வளர்ப்பை கவனிக்க முடியாமல் போய்விடும். ஒரு ஒழுக்கமுள்ள நல்ல சந்ததியை கொடுக்க தவறியவர்களாவோம். இவ்விஷயத்தில் விவாதம், தர்க்கம் என்று பண்ணிக்கொண்டு போகலாம். ஆனால் ஒரு சீனியர் சிட்டிசன் என்ற முறையில் அனுபவப்பட்டு சொல்கிறேன். வீட்டை கவனிப்பது கஷ்டமான காரியம்தான். இளம்வயதில் எல்லாவற்றையும் சமாளிக்க தெம்பும் தைரியமும் இருக்கும். ஆனால் வயதான காலத்தில்தான் அதன் பலனை அனுபவிப்பீர்கள். அப்பொழுதுதான் மகிழ்ச்சியும், வாழ்கையில் ஒரு திருப்த்தியும், மன நிம்மதி கிடைக்கும். மற்றவர்களின் வாழ்கையை கம்பேர் செய்து வாழாமல், ஆண்டவன் நமக்கு கொடுத்த இந்த வாழ்கையை இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தாலே போதும் :))
    நன்றி வாழ்த்துகள்.
    எப்படி எழுதுவதற்கு நேரம் கிடைக்கிறது ? வியக்கேன் :))

    1. நான் சொன்ன சில factors சரிா அமைஞ்சா அழகா வேலைக்குப் போயி குடும்பத்தையும் கவனிக்கலாம். பாப்பா தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமா டைப்பிட்டேன். 😊 அதனாலதான் நான் பிசினஸ் ஆரம்பிச்சேன். டைமிங் நம்ம கையில். 😊

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s