ஒரு பயணம் (2113 – 2013)

டின் டின் டின்.. அலாரம் அடித்தது. ஆத்மா எழுந்து தன் பிரத்தியேக ரோபோவை ஆன் செய்துவிட்டு தினசரி வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் அதற்கு ஆசையாக வைத்த பெயர் மினி. ஆனால் அது உண்மையில் மினி அல்ல, பல ரோபோக்களின் தொகுப்பு. ஹைட்ரோஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்து சரியான சூட்டோடு வெந்நீர் தயாரித்து, ஆத்மாவின் மனநிலை புரிந்து மெல்லிசை அமைத்து, அன்றைய நாளிதழில் அவனுக்குப் பிடித்த நடிகை  படத்தை முதல் பக்கத்தில் அச்சிட்டு அவனிடம் தந்தது. அதே நேரம் புதிய ரக காபியை வறுத்து அரைத்து அந்தக் கால டிகிரி காபியை மணம் மாறாமல் கலந்து அவன் மேசையில் வைத்து உத்தரவுக்காக காத்து நின்றது.

ஆத்மாவுக்கு ஒரு பழக்கம் உண்டு, எல்லா வேலைகளும் மினி செய்தாலும் நாட்காட்டியை தானே கிழிக்க வேண்டும் என்பான், அந்த வேலையாவது செய்வோம் என்ற எண்ணம் போலும். மெல்லிசைக்குத் தக்க நடனமாடிக் கொண்டே வந்து நாட்காட்டியைக் கிழித்தான். அது ஒரு சிவப்பு நிற பின்புலம் கொண்ட அழகான நாட்காட்டி. அவன் அம்மா இயற்கை பிராண வாயு விற்கும் கடையில் ஒரு கோடி இந்திய டாலர்களுக்குக் கொள்முதல் செய்யும்போது கடைக் காரனிடம் சண்டை போட்டு வாங்கி வந்தார். தேதி (27-6-2113) பார்த்துக் கொண்டே “மினி இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்” என்றான். அது தன் நினைவிலிருந்து அன்றைய நிகழ்வுகளைப் பட்டியலிட்டது. அன்று திங்கள் ஆனதால் இன்னும் மூன்று நாட்கள் அவனுக்கு வேலை இருந்தது.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் திங்கள் வேலைகள் சற்று அலுப்புத் தரக்கூடியவை தான். வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய வேலையும் நான்கு நாட்கள் கட்டாய ஓய்வும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.சாப்பாடு, செயற்கை சுவாசம் போன்றவற்றை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம். எல்லாருக்கும் ஒரே மாதியான சலுகைகள் தான். நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த ஊழலும், ஏற்றத் தாழ்வுகளும் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் மக்களின் திறமைக்கேற்பவும், மனப்பாங்குக்கு ஏற்றபடியும் வாழ்ந்து வந்தனர். உதவி மனப்பான்மை பெருகவும், பொய் பொறாமை நீங்கவும் குழந்தைகளுக்கு ஹார்மோன்கள் செலுத்தப்பட்டன. அனைவரும் உருவமற்ற ஒரே கடவுளைப் பின்பற்றினர். பல தட்பவெப்ப, அரசியல் மாற்றங்களை அடைந்த பூமி தற்போது “இந்தியா” என்ற தனிக் கிரகமாக விளங்கியது.

ஆத்மா தன் மூன்று நாட்கள் வேலையை வீட்டிலிருந்தே செய்யப் பணிக்கப் பட்டிருந்தான். அவனைத் தவிர பல பேருக்கும் அதே உத்தரவு. போக்குவரத்து மற்றும் எரிபொருள் சேமிப்பு காரணம் சொல்லப்பட்டது. இந்திய கிரகத்தின் விதிகள் கடுமையாக்கப் பட்டிருந்தது. வெளியே காரணம் இல்லாமல் சுற்றக் கூடாது, மீறினால் உரிமம் மற்றும் வாகனம் பறிக்கப் படும். தற்போதைய அதிபர் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுக்க இவ்விதமான விதிகளை சட்டமாக்கி இருந்தார். விடுமுறையன்று இரண்டு தினங்கள் பிடித்த இடங்களுக்கு சென்று கொள்ளலாம். ஆனால் செயற்கை சுவாச வரி நிறைய செலுத்த வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சனையில் இருந்து  தப்பிக்க ஆத்மா ஒரு உபாயம் கண்டு பிடித்திருந்தான். சென்ற பத்து வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக முயன்று ஒரு கால எந்திரத்தை தயாரித்திருந்தான். காலத்தில் பின்னோக்கிச் சென்றால் இந்த செயற்கை சுவாசப் பிரச்சனை இல்லை என்று அறிந்து தான் இந்த  திட்டத்தை செயல்படுத்தினான். இந்த விடுமுறையில் அதில் தான் வெள்ளோட்டம். வ்ரூம் வ்ரூம் வ்ரூம்!!

வியாழன் காலை எழுந்ததும், மினியை அழைத்துக் கொண்டு டைம் மிசினில் ஏறி நின்றான். முகநூலில் தன் தாத்தாவின் டைம் லைனில் பின்நோக்கிச் சென்று கண்டுபிடித்து சில வரைபடங்களை மினியின் சிப்களில் ஏற்றியிருந்தான். தன் அம்மாவை நினைத்துக் கொண்டு யந்திரத்தை இயக்கத் தொடங்கினான். மினி அவனுக்காக புது இசை அமைத்துக் கொண்டிருந்தது. யந்திரத்தின் பானல் போர்டில் இருந்த விசை பலகையைத் தட்டி பிரத்யேகமான கடவுச்சொல்லை அழுத்தினான். “Destination” என்று கேட்ட இடத்தில் “Past” என்று தேர்வு செய்தான். ஒரு குமிழ் ஒன்று தோன்றியது. அதைத் திருகி அவன் செல்ல விரும்பும் வருடத்தை “2013” எனவும் இடத்தை “Coimbatore” எனவும் தேர்வு செய்தான்.  மினியுடன் ஆலோசித்து அவன் செல்லும் வரை படத்தை “GPS” இல் இணைத்துக் கொண்டான். யந்திரத்துடன் இணைக்கப் பட்டிருந்த கணினி, 2013 வருடத்துக்கான ஆடையை இவன் அளவுக்கு வடிவமைக்க மினி துணியை தேர்ந்தெடுத்து தைத்து வைத்தது. அந்த ஊருக்கான கரன்சிகளை பழைய பொருள்கள் கிடைக்கும் கிடங்கிலிருந்து மாற்றி வைத்திருந்தான்.
ஆத்மா குதூகலத்துடன் தன் விடுமுறை பயணத்தைத் துவங்கினான். “Go”…… 3……2…..1………0………டடடடடா டிடிடிட்டி ற்ற்ரீ எனப் பலவகையான ஓசைகள். அடுத்த வினாடி அவன் நூறு வருடங்கள் பின்னோக்கி இருந்தான். அவன் கையில் சிறிய கை பேசி வடிவில் மினி. இனி 2013.. ட்ரீன் ட்ரீன்  ட்ரீன் …

கோவை நகருக்குள் பிரவேசித்தான். மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டும் நகர்ந்து கொண்டும் இருந்தனர். அவர்களின் நடை உடை பாவனைகளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு நடந்தான். மினி  தன் மைக்ரோக் கண்ணுக்குள் அனைத்தையும் படமாக எடுத்துக் கொண்டது. நல்ல சுத்தமான காற்று சுவாசிக்கக் கிடைத்தது. சாலையோரங்களில் தெருக்குழாய்களில் நீர் தாராளமாகக் கிடைத்தது. காற்றை ஆழ்ந்து சுவாசித்துத் தன் நுரையீரலை மகிழ்ச்சி கொள்ளச் செய்தான். காற்றுக்கும் நீருக்கும் தன் ஊரின் மதிப்பில் விலை போட்டுப் பார்த்தான். ஆயிரத்து ஐநூறு இந்திய டாலர்கள் இந்த ஐந்து நிமிடங்களில் உபயோகித்து இருந்தான். மனதிற்குள்ளேயே மூர்ச்சை ஆனான். கொஞ்சம் நடந்து ஒரு அடுமனையை அடைந்தான். சில கேக்குகளும், பிஸ்கட்டுகளும், சமொசாக்களும் காலி ஆகின. அவன் ஊரில் இப்படி எல்லாம் தின்றால் அபராதம் செலுத்த வேண்டும். இந்த பலகாரங்களை ஆத்மா தன் வீட்டு புராதன ஆல்பத்தில் பார்த்திருக்கிறான்.

மனம் குதியாட்டம் போட்டது. தன் முதல் கால யந்திரப் பயணம் வெற்றியடைந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் விசிலடித்தான். சிலரிடம் சென்று பேசினான். இவனின் விஞ்ஞான  மொழியைக் கேட்டு அமெரிக்காவிலிருந்து லீவுக்கு வந்திருக்கிறாயா என்றனர். பல இளவட்டங்கள் நண்பர்கள் ஆகினர். எல்லாரும் யாரிடமாவது தொலை பேசியில் பேசிக் கொண்டே இருந்தனர். ஆத்மாவுக்கு பொறாமையாக இருந்தது. தன் “மினி” மூலமாக “I am @ 2013” என்று முகநூலில் ஸ்டாடஸ் அப்டேட் செய்தான். ஒரு லைக் கூட கிடைக்க வில்லை. அவன் நூற்றாண்டில் நண்பர்கள் அமைய வாய்ப்புகள் மிகக் குறைவு. பள்ளி, கல்லூரி, எல்லாமே அவன் வீட்டிலேயே முடிந்து விட்டது. வேலைக்கான நேர்காணல் மட்டும் ஒரு ஹெலிகாரில் அழைத்து சென்றார்கள். அரசாங்க அனுமதியுடன் இவன் பிறக்கும் போது இவன் அம்மா ஐம்பது வயதைக் கடந்திருந்தார். இவன் சொந்தம் பந்தம் எல்லாருக்குமாக இவன் ஒருவன் தான் அடுத்த தலைமுறை வாரிசு. எனவே யாரிடமும் ஒட்டாமல் வளர்ந்தான். சக வயது தோழர்களோ, உறவினர்களோ யாரும் இல்லாமல் வளர்ந்ததால் நட்பு என்றால் இதிகாசங்களில் படித்தது தான் நினைவுக்கு வரும். அப்படி ஒரு தனிமைச் சிறையில் இருந்தவன் கோவை நகரைப் பார்த்து வியந்ததில் வியப்பேதும் இல்லை அல்லவா?

அவன் இதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டு, தன் நூற்றாண்டைப் பற்றிக் கவலையுடன்  மினியில் தன் சொல்ல முடியாத துயரத்தைப் பதிவு செய்து கொண்டிருந்தான். டக்கென மனதில் ஒரு மின்னல் வெட்டியது. தன் அதிகாரியைத் தொடர்பு கொண்டு ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டான். கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கொண்டான். ஆத்மாவின் நல்லொழுக்கமும் புத்திசாலித் தனமும் துணை நின்றன. சம்பளம் நான்காயிரம் ரூபாய்கள் தருவதாகக் கூறினார்.தூய காற்றுக்கும், நீருக்கும் விலை ஏது  என்று சந்தோசமாக ஏற்றுக் கொண்டான். இவனுக்கு தரப்பட்ட நல்ல ஹார்மோன்களால் இவன் மிகுந்த நல்லவனாக இருந்தான். பல நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.
முகநூலில் தொடங்கி அனைத்து சமூக  

வலைதளங்களிலும் நண்பர்களைப் பெருக்கிக் கொண்டான். பத்து நாட்களில் தன்னைச் சுற்றி புது உலகையே அமைத்துக் கொண்டான். மினியின் உதவியால், பல இருபத்தி இரண்டாம் நூற்றாண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கால யந்திரத்தில் ஒரு மாற்றம் செய்தான். அந்தத் தொழில்நுட்பம் இறந்தகாலத்தை நிகழ் காலத்துடன் இணைத்தது. அதன் படி நாம் நினைத்த காலத்துக்கு  இன்டர்நெட் உதவியுடன் பயனிக்கலாம். சுருக்கமாக சொல்வதென்றால் என்றால் இப்போது ஆத்மா நினைத்தால் முகநூலில் நூறு வருடத்துக்கு முந்தய தன் நண்பர்களுடன் சாட் செய்யலாம். ட்விட்டரில் நூறாண்டுக்கு முன் நடந்த இலங்கைப் பிரச்சனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.  ஸ்கைப்பில் முகம் பார்த்து உரையாடலாம்.

பத்து நாட்கள் கழித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கண்களில் நீர் வழிய 2013க்கு விடை கொடுத்து கோவையைப் பிரிந்தான். மினி கூட சோகமான இளையராஜா பாடல்களை இசைத்தது. கால யந்திரத்தில் 2113 செலக்ட் செய்து வழி திரும்பினான். “Return” 3……2…..1………0………டடடடடா டிடிடிட்டி ற்ற்ரீ.. சில மைக்ரோ வினாடிகள், 2113இல் இருந்தான். அவன் செய்வதற்கான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன அவன் மேஜையில். மூன்று நாட்கள் வேலைக்குப் பின் தன்  முகநூலில் நுழைத்து “hai” என்று பதிவு செய்தான். 102 லைக்ஸ், 52 கமெண்டுகள். தனிமை மறந்து உற்சாகச் சிரிப்புடன் மினியுடன் தன் வார இறுதியைக் கொண்டாடத் தொடங்கினான்.

பின் குறிப்பு:
இந்தக் கதை எழுத்தாளர் திரு மதிப்புக்குரிய சுஜாதா அவர்களின் “விஞ்ஞான கதைகள்” தொகுப்பின் பாதிப்பில் எழுதப்பட்டது. அவரின் விஞ்ஞானக் கதைகளின் நாயகனான ஆத்மாவின் பெயரையே பயன்படுத்திக் கொண்டேன்.

நன்றி,
அன்புடன்,
ரேணுகா

love-inspirational-daily


26 thoughts on “ஒரு பயணம் (2113 – 2013)

  1. நன்றி அக்கா.. சுஜாதாவின் கதைகள் எப்புடி இருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன் ..நமது எதிர்காலவாழ்க்கை முன்னேற்றத்தில் செல்கிறதா? இல்ல மனிதம் குறைத்து விட்டதா?

  2. நல்ல கற்பனைதுவம் உங்களுக்கு.. ஒரு சில வரிகளில் வருங்காலத்தை புட்டு வைத்தது போல் இருந்தது..வாழ்த்துக்கள்..:-)))

  3. சுவாரஸ்யமா இருந்துச்சு ரேணு. இனி வரும் கதைகளில் கொஞ்சம் விகடத்துக்கும் இடம் கொடுமா. வாழ்க வளர்க.

  4. கதை ரொம்ப நல்ல இருக்கு… 🙂 நல்ல கற்பனை.. உன்னோட தமிழ், எழுத்து நடை எல்லாமே சூப்பர்… இன்னும் நெறைய எழுது… எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂 ….. !
    எனக்கும் படிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி :)… !

  5. கோவை என்றாலே இளையராஜாவும் கூட வந்துவிடுகிறார். சுஜாதாவின் பாதிப்பு படிக்க ஆரம்பித்தவுடனேயே தெரிந்தது. இந்தக் கதை அவருக்கே சமர்ப்பணம். சூப்பரா எழுதியிருக்கீங்க 🙂 வாழ்த்துகள்!

    amas32

  6. ஒரு ஜூனியர் சுஜாதா உருவாகறாங்க…வாழ்த்துகள்!.. ஆத்மா சாந்தி அடையட்டும் 🙂

  7. இந்திய கிரகத்தில் கடுமையான விதிகளா?அதைத்தவிர கற்பனை நல்லா இருக்கு.

  8. ஒய்… நல்லா இருக்கு… :-)) சுஜாதா சிறுகதை படிச்ச ஒரு எப்பெக்ட்.. கடைசில ஒரு பஞ்ச் எதிர்பார்த்தேன்.. 😉 இன்னும் நிறைய எழுது… :))) @சேந்தன் அமுதன்… ;))

  9. @ravan181 says:
    அதெப்படி ஆத்மாவிற்கு 27-6- என்று உங்கள் பிறந்த நாள் தெரிந்திருக்கிறது . அன்று ஆத்மா பிறந்த நாள் வில்லையா . கோவை ,அடுமனை , கேக்குகள் பிஸ்கட்டுகள் சமோசாக்கள் என்று உங்கள் சம்பத்தப்பட்ட விஷயம் மட்டும் தெரிந்திருக்கிறது. ரேனுவிர்க்குகொஞ்சம் ஸ்க்ரூ தளர்ந்துவிட்டது . கூடியவிரைவில் செவ்வாய் கிரஹத்தில் வசிக்கக்கூடிய வாய்ப்பு கிட்டபோகிறது

  10. எனக்கு படிக்க ஆரம்பித்ததுமே சுஜாதாவின் கதைகள் நினைவுக்கு வந்தன. ஆத்மா. மிகவும் அறிமுகமான பெயர்.விஞ்ஞான உலகின் சித்தரிப்பு, உரிமை இழப்பு, சுற்றுப்புறத்தின் நிலை, எல்லாம் அருமை. அதிலும் அந்த ஒரு கடவுள், எல்லோரும் நல்லவர்கள் என்ற இடத்தில் மிகவும் சிறப்பு. கதை முடிவில் அவன் இங்கு தங்கி விடுவான் என்று யூகித்தேன்:)
    மிகவும் சிறப்பு ரேணு:))

Leave a reply to Sakthivel Cancel reply